சபாநாயகராக இருந்தபோது தன் மீதே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தவர் ஓபிஎஸ் என முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் கிண்டலாக தெரிவித்த சம்பவம் திமுக நிர்வாகிகளிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்த பிறகு தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் நடைபெற்ற திமுக தேர்தல் பரப்பரை கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.
அப்போது பேசிய மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவருமான ஆவுடையப்பன், “திமுகவில் இணைந்துள்ள ஓபிஎஸ் அதிமுக கட்சிக்கு மிகவும் விசுவாசமாக இருந்தார். மூன்று முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார். ஆனாலும் அந்த பதவியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படாமல் அந்த பொறுப்பை கொடுத்த நபருக்கே மீண்டும் பதவியை கொடுத்தார். அந்த அளவுக்கு கட்சி மீது அவர் விசுவாசமாக இருந்தார். ஏன் நான் சபாநாயகராக இருந்தபோது ஓபிஎஸ் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். அப்போது என் மீது அவர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். அந்த அளவுக்கு கட்சிக்கு கட்டுப்பாடாக இருந்தார்” என்றார்.
தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், “கடந்த காலங்களில் ஆவுடையப்பன் சபாநாயகராக இருந்தபோது நான் கட்சி கட்டளையை ஏற்று அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தேன். அவர் இந்த கூட்டத்தில் அதை நாசுக்காக சொல்லியிருக்கிறார். ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தவருக்கே தற்போது நான் பொன்னாடை போற்றுகிறேன். இது தான் திராவிட இயக்கத்தின் பாரம்பரியம். ஆவுடையப்பன் சபாநாயகராக இருந்தபோது அவையில் என் பக்கத்தில் இருப்பவர்கள் வேகமாக பேசுவார்கள். ஆனால், ஆவுடையப்பன் பொறுமையாக இருப்பார். நான் அவரிடம் ஏன் இவ்வளவு அமைதியாக இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி இருக்கிறேன்.
அதற்கு எங்கள் தலைவர் பொறுமையாக அவையை நடத்தும்படி கட்டளையிட்டுள்ளார். எனவே ஐந்து ஆண்டுகால ஆட்சியை பிரச்சனை இல்லாமல் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக தலைவரின் கட்டளையை ஏற்று கடமையாற்றுவதாக ஆவுடையப்பன் தன்னிடம் தெரிவித்தார். அந்த அளவுக்கு ஆவுடையப்பன் அமைதியானவர், பொறுப்பானவர்” என ஓபிஎஸ் கூறினார்.
ஓபிஎஸ் அதிமுகவில் இருந்தபோது திமுக மீது எடுத்த நடவடிக்கை குறித்து முன்னாள் சபாநாயகர் கலகலப்பாக பேசியது அங்கிருந்த தொண்டர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.

