சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் பலம் தான் ஜெயிக்கும் பணபலம் ஜெயிக்காது என மதுரையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டியளித்துள்ளார்.
மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் உணவு விடுதியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மக்களை ஏமாற்றுகிற வகையில் அறிவிப்புகள் செய்து தேர்தலை சந்திக்க இருக்கிறார்கள்.
திமுகவினர் அவர்களது குடும்பம் ஆள வேண்டும் என்பதற்காக பல்வேறு தவறான திட்டங்களையும் செய்திகளையும் பரப்பி, துணை முதலமைச்சர் ஆக இருக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்று அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.
பழைய ஓய்வு ஊதியக்தை கொண்டு வருவோம் என்று சொன்னவர்கள் ஆட்சிக்கு வந்த இந்த 5 ஆண்டுகளில் எதுவும் செய்யவில்லை. பணத்தையும் அதிகாரத்தையும் வைத்து ஆளும்கட்சி ஆகிவிடலாம் என்று எண்ணுகிறார்கள். அது நடக்காது.
1977 கொலைகள் மற்றும் 38 பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை, கொடூர கொலை வழக்குகள். சட்டம் ஒழுங்கு இவ்வாறு சீர்கெட்டிருக்கும் நேரத்தில், தூத்துக்குடி சம்பவத்திற்கு காவல்துறையுடைய நிலைபாடு தான் என்ன?
கடந்த ஐந்து ஆண்டுகளில் கைப்பற்றப்பட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்களுடைய எண்ணிக்கை அதிகம். திமுக தேர்தல் வரும் போது ஒரு உத்தியை கையாளுகிறார்கள். இலவசம் மற்றும் வெற்று வாக்குறுதிகள் தான் அவை.
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதவ் அர்ஜுன் ரஜினிகாந்த் குறித்து. மிகச் சிறந்த ஆன்மீகவாதி குறித்து விமர்சனம் செய்திருப்பது வருந்தத்தக்கது. நிச்சயம் ரஜினி ரசிகர்கள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ரஜினிகாந்திற்காக முதல் முதலாக குரல் கொடுத்தது பாரதிய ஜனதா கட்சி. ஆதவ் அர்ஜுனா வருத்தம் தெரிவிப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை.
அதிமுக உடனான தொகுதி பங்கீடு குறித்து எங்களுக்குள் எதுவும் சிக்கல் இல்லை இன்னும் நாட்கள் இருக்கின்றன. கரூர் விகாரத்தில் சிபிஐ விவகாரம் குறித்து நான் பதில் கூற முடியாது.
இந்த தேர்தலில் மக்களாட்சி மீண்டும் அமையும். பணபலம் ஜெயிக்காது மக்களின் மன பலம் ஜெயிக்கும்” என்றார். அதனைத் தொடர்ந்து திமுக உள்ளிட்ட மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.

