சென்னையில் தலைக்கவசம் அணியாமல் பைக் டாக்சியில் பயணித்த பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை எம்.ஜி.ஆர் நகரில் இருந்து வெண்ணிலா (44) என்பவர் வேளச்சேரி செல்வதற்காக பைக் டாக்சி புக் செய்துள்ளார். இதையடுத்து பைக் டாக்சி ஓட்டுநரான மாதவன் என்பவர் வெண்ணிலாவை அழைத்து செல்ல எம்ஜிஆர் நகருக்கு வந்துள்ளார். இதன்பின் வெண்ணிலாவை இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் ஏற்றிக்கொண்டு வேளச்சேரிக்கு புறப்பட்டுள்ளார்.
அப்போது கிண்டி கத்திபாரா அருகே சென்று கொண்டிருந்த போது தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த ஈச்சர் கனரக வாகனத்தை முந்திச் செல்ல மாதவன் முற்பட்டுள்ளார். அப்போது கனரக வாகனம் மோதியதில் பைக் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில், வெண்ணிலா ஈச்சர் வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஈச்சர் வாகன ஓட்டுநர் வாகனத்தை சாலை ஓரம் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். பின்னர் இது குறித்து தகவல் அறிந்த கிண்டி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெண்ணிலாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனை அடுத்து இந்த விபத்து குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பைக் டாக்சியை ஓட்டி வந்த மாதவன் சிறு காயங்களுடன் உயிர் தப்பி நிலையில், வாடிக்கையாளருக்கு தலைக்கவசம் அணியாமல் அழைத்து வந்ததற்கு, அவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
பைக் டாக்சியில் பயணித்த பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று போக்குவரத்து விதி உள்ள நிலையில், பைக் டாக்சி ஓட்டுநர் அதை மீறியிருப்பதும் பேசுபொருளாகி உள்ளது.

