ஆந்திராவில் இருந்து தார்ப்பாய் போட்டு மறைந்து, நூதன முறையில் ஆற்று மணலை கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திரா மாநிலத்திலிருந்து ராணிப்பேட்டை மாவட்டம் வழியாக லோடு லாரிகளில், சட்டவிரோதமாக மணல் கடத்தி வருவதாக கனிம வளத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில், ராணிப்பேட்டை மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குநர் சீனிவாசராவ் தலைமையிலான குழுவினர் இரவு முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, ராணிப்பேட்டை அருகே உள்ள சிப்காட் பகுதியில் ஆந்திர மாநில பதிவெண் கொண்ட சில லோடு லாரிகள் தார்ப்பாய் போட்டு முழுவதும் மூடிக் கொண்டு செல்வதை அதிகாரிகள் கவனித்துள்ளனர். அதில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அந்த லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த சோதனையில் லாரிகளில் சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றி, அதன் மீது தார்ப்பாய் போட்டு மூடி வந்தால், பொருட்கள் ஏற்றி வருவது போல காட்டிக் கொள்ளலாம் என நூதன முறையில் கடத்தி வந்தது தெரியவந்தது. அதையடுத்து, மணல் கடத்தி வந்த 4 லோடு லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, மணல் கடத்தலில் ஈடுபட்ட திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தனுஷ், ரஞ்சித், கிரிக்குமார் மற்றும் ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசலு ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் சிப்காட் போலீசாரின் உதவியுடன் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பாக கனிம வளத்துறை உதவி இயக்குநர் சீனிவாசராவ் கூறுகையில், மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

