காலை 7 மணிக்கெல்லாம் ஜன்னல் வழியே எட்டிப்பார்க்கும் வெயில், ‘நானும் வந்துட்டேன்’ என்று சொல்வது போல தன் உஷ்ணத்தை காட்ட தொடங்கிவிடுகிறது. தூங்கி எழுந்ததுமே உணர முடிகிற இந்த வெப்பம், அன்றைய பொழுது எவ்வளவு அனலாக இருக்க போகிறது என்பதை முன்கூட்டியே எச்சரிப்பது போல் இருக்கிறது.
அலுவலகம் செல்பவர்கள், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் என யாராக இருந்தாலும், இந்த வெயிலில் பயணப்படுவது பெரும் சவாலாகவே இருக்கிறது. தாகம் எடுத்தால் உடனே ஐஸ் வாட்டரையோ அல்லது கடையில் விற்கும் கலர் பானங்களையோ குடித்தால் அந்த நிமிடம் “அப்பாடா” என்று இருக்கும்.
ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே வயிறு உப்புசம், அசிடிட்டி என உடல் உபாதைகள் வரிசை கட்டி வந்து நிற்கும். வெயிலின் தாக்கத்தால் நம் உடல் நீர்ச்சத்தை இழந்து, செரிமான மண்டலமே தடுமாறி போகிறது. இந்த சூழலில், நம் உடலை உள்ளிருந்து குளிர்ச்சியாக வைத்திருக்கவும், வயிற்றுக்கு பாதுகாப்பு தரவும் இயற்கையிலேயே சில பழங்கள் கை கொடுக்கின்றன. அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
தாகம் தீர்க்கும் தர்பூசணி
வெயில் காலத்தின் அடையாளம் என்று சொன்னாலே அது தர்பூசணி தான். இதில் நீர்ச்சத்து அதிகம் என்பது நமக்கு தெரியும், ஆனால் இது குடல் ஆரோக்கியத்திற்கும் மிகச்சிறந்தது. தர்பூசணியில் உள்ள லைகோபீன், வைட்டமின் சி மற்றும் பாலிபினால்கள் வீக்கத்தை குறைக்கும் பண்புகளை கொண்டவை என NIH ஆய்வில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, நாம் தூக்கி எறியும் அந்த வெள்ளை நிற தோல் பகுதியில் தான் குடலுக்கு தேவையான நார்ச்சத்து அதிகம் இருப்பதாக Agricultural and Food Sciences ஆய்வு கூறுகிறது. இது குடலில் கொழுப்பு உறிஞ்சப்படுவதை குறைக்க உதவும் என ஆய்விலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தர்பூசணியை முழுமையாக சாப்பிடுவது கோடை காலத்திற்கு மிகவும் நல்லது.
வெயில் காலத்தில் ஏற்படும் செரிமான கோளாறுகளை சரிசெய்ய பப்பாளி ஒரு மிகச்சிறந்த மருந்து. பப்பாளியில் உள்ள ‘பாப்பைன்’ மற்றும் ‘சைமோபாப்பைன்’ ஆகிய நொதிகள் நாம் உண்ணும் உணவில் உள்ள புரதத்தை எளிதில் ஜீரணிக்க உதவுகின்றன என்கிறது NIH ஆய்வு.
கோடை வெப்பத்தால் குடலில் உள்ள பாக்டீரியாக்களின் சமநிலை மாறும்போது, பப்பாளி அந்த சமநிலையை சீர்செய்கிறது. ஆய்வின்படி, இது தீமை செய்யும் பாக்டீரியாக்களை அழித்து, உடலுக்கு தேவையான நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்க செய்கிறது.
கோடை என்றாலே மாம்பழ சீசன் தான். இதில் உள்ள ‘ப்ரீபயாடிக்’ நார்ச்சத்து, நம் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவாகி உடலை ஆரோக்கியமாக வைக்கிறது. மாம்பழத்தில் உள்ள நீர்ச்சத்து மற்றும் நுண்ஊட்டச்சத்துக்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும் என Food and Function ஆய்வு இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், மாம்பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை கூடும் அல்லது சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்பதால், அளவோடு சாப்பிட்டு அதன் முழு பலனையும் பெறுவது அவசியம்.
வாழைப்பழம்
எல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்கும் வாழைப்பழம், கோடை காலத்திலும் நம் குடலுக்கு பாதுகாப்பாக உள்ளது. இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து செரிமானத்தை சீராக்குகிறது என International Journal of Agricultural Sciences ஆய்வில் தெரியவந்துள்ளது. வாழைப்பழத்தை முறையாக தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது, அது குடல் அழற்சி மற்றும் பெருங்குடல் புண் போன்ற தீவிரமான பிரச்சனைகளிலிருந்து நம் உடலைப் பாதுகாக்கிறது.
அன்னாசி
வெயிலுக்கு இதமான அன்னாசிப் பழத்தில் ‘புரோமிலைன்’ என்ற என்சைம் உள்ளது. இது செரிமானத்திற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்கும் தன்மையும் கொண்டது. அன்னாசிப் பழத்தைப் புதிய பழமாகச் சாப்பிடும்போதுதான் அதன் முழுமையான சத்துக்கள் கிடைக்கும் என ஆய்வு பரிந்துரைக்கிறது.
குடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே தொற்று நோய்களிலிருந்து உடல் தற்காத்துக்கொள்ள முடியும் என Journal of Gastroenterology வலியுறுத்துகிறது. எனவே, வெறும் குளிர் பானங்களை நாடுவதற்கு பதில், இதுபோன்ற பருவகாலப் பழங்களைச் சாப்பிடுவது நம் ஆரோக்கியத்திற்கு வலுசேர்க்கும்.

