குற்றவாளிகளை பிடிக்க காவல்துறையினருக்கு கூடுதல் அதிகாரம் வேண்டும் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
கோவை காளப்பட்டி பகுதியில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பெண்கள் பாதுகாப்பு, அரசியல் கூட்டணி மற்றும் வரவிருக்கும் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்தார்.
விளாத்திகுளத்தில் 17 வயது பெண் கொலை வழக்கில் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை என்று கூறிய அவர், காவல்துறையினர் முறையாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியிருந்தால் இந்த சம்பவத்தைத் தடுக்க முடிந்திருக்கும் என்றும், குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாதது கவலை அளிப்பதாகவும் தெரிவித்தார். காவல்துறைக்கு மேலும் அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டில் சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் பற்றாக்குறை இல்லை என்று தெரிவித்த அவர், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் மூலம் எரிவாயு வந்துள்ளதாகக் கூறினார். இதனை வெளியுறவுத்துறை கொள்கையின் வெற்றியாக அண்ணாமலை குறிப்பிட்டார். சில நாள்களுக்கு ஏற்பட்ட சிலிண்டர் பிரச்சினை தற்போது சரியாகி, உணவகங்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இணைந்து 17-ஆம் தேதி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் அவர் அறிவித்தார். அதிமுக தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது என்றும், முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை வெற்றி பெறச் செய்ய பாடுபடுவோம் என்றும் கூறினார்.
விஜய் தலைமையிலான தவெக குறித்து தனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று கூறிய அண்ணாமலை, அவர்களின் கொள்கை வேறு, பாஜக கொள்கை வேறு என்றும் விளக்கினார். ஜனநாயகன் படம் தொடர்பான சிபிஐ விசாரணை குறித்து கருத்து சொல்ல வேண்டியது விஜய்யே என்றும் அவர் கூறினார்.
வரவிருக்கும் 2026 தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ளதாகவும், பாஜக மற்றும் அதிமுக கூட்டணி வலுவாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். கொங்கு மண்டலத்தில் இருந்து அதிக பாஜக சட்டமன்ற உறுப்பினர்களை அனுப்புவதே கட்சியின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.
மேலும், தான் வேட்பாளராக நிற்க வேண்டும் என யாரிடமும் கேட்கவில்லை என்றும், கட்சி வழங்கும் பொறுப்பை மட்டும் மேற்கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்காக பணியாற்றுவேன் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

