முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி ஆயுள் தண்டனை கைதி அளித்த விண்ணப்பத்தை நிராகரித்ததை அவருக்கு தெரிவிக்காத தமிழக அரசுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பத் என்பவர், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி அவருடைய மனைவி சந்தியா, தமிழக அரசிடம் விண்ணப்பத்திருந்தார். அந்த விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சந்தியா மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் அனிதா சுமந்த், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 20 ஆண்டுகளாக சிறைதண்டனை அனுபவித்து வரும் சம்பத்துக்கு முன்கூட்டி விடுதலை பெற உரிமை உள்ளது உள்ளது என்றும், கடந்த 2025 டிசம்பர் மாதம் அளித்த விண்ணப்பம் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், மனுதாரரின் விண்ணப்பம் கடந்த பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி நிராகரிக்கப்பட்டு விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, மனு நிராகரிக்கப்பட்டதற்கான உத்தரவின் நகல் ஏன் மனுதாரருக்கு வழங்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது அதிகாரிகளின் கடமை தவறிய செயல் என்றும், இதன் காரணமாக மனுதாரார் நீதிமன்றத்தை நாடவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் சுட்டிக் காட்டினர்.
மனுதாரர் விரும்பினால், மனு நிராகரிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யலாம் என அனுமதி வழங்கிய நீதிபதிகள், மனுதாரருக்கு வழக்கு செலவாக 5 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் என தமிழக உள்துறைச் செயலாளர், சிறைத் துறை தலைவர், புழல் சிறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டனர்.

