யாருடையை உதவியும் இல்லாமல் 25 திரைப்படங்களில் நடித்திருப்பது பெருமிதமாக உள்ளது என்று நடிகர் விக்ரம் பிரபு கூறினார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி தற்போது வரை வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் திரைப்படம் ‘சிறை’. சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் செவன் க்ரீன் ஸ்டூடியோ தயாரிப்பில் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவான திரைப்படம் ‘சிறை’. இந்த திரைப்படத்தின் 75-வது நாள் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது.
விழாவில் பேசிய திரைப்பட இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி, “இந்த திரைப்படத்தின் கதைக்கு முக்கியமானவர் கதை ஆசிரியர் தமிழ். ஒருவர் தன்னுடைய கதையை இயக்குநரிடம் கொடுக்கும் போது இவர் சரியாக திரைப்படத்தை எடுப்பார் என நம்பினால் மட்டுமே அவர்களுடைய கதையை கொடுப்பார்கள். அந்த வகையில் எனக்கும், தமிழுக்கும் இடையே இருக்கும் புரிதல் சிறப்பாக அமைந்திருந்தது. நடிகர் விக்ரம் பிரபு என் மேல் ஒரு நம்பிக்கை வைத்ததற்கு மிக முக்கிய காரணம் இயக்குநர் வெற்றிமாறனிடம் இருந்து நான் வந்தது தான். எனக்குள் ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை அவர் புரிந்துக் கொண்டார்.
தயாரிப்பாளர் லலித் கதையை நம்பி இந்த திரைப்படத்தில் அவருடைய மகனை கதாநாயகனாக கொண்டு வந்தார். இந்த திரைப்படத்திற்கான விளம்பரத்தை நாங்கள் என்ன தான் செய்திருந்தாலும் படம் பார்த்தவர்கள் படத்தின் பிரதிநிதியாக மாறி வாய்மொழியாக மற்றவரிடத்தில் கூறியதன் விளைவாகவே இந்த வெற்றி சாத்தியமானது. தயாரிப்பாளரிடம் இந்த படத்தை சரியாக எடுத்துக் கொடுப்பேன் என சொன்னேன். அதை சரியாக செய்திருக்கிறேன் என நம்புகிறேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய திரைப்படத்தின் கதையாசிரியர் தமிழ், “இந்தப் படத்தை பத்திரிகையாளர்கள் மற்றும் இஸ்லாமிய தலைவர்கள், ரசிகர்கள் வாய்மொழியாகவே மிகப் பெரிய வெற்றிக்கு கொண்டு சென்று விட்டனர். என்னுடைய சொந்தப் படம் வெற்றி அடைந்தது போல் உள்ளது. படத்தில் நடித்திருக்க கூடிய அனைத்து கலைஞர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இந்த வெற்றி சமமாக கிடைத்திருக்கிறது. இந்த திரைப்படத்தின் கதையை தயாரிப்பாளரிடம் 40 நிமிடங்கள் சொன்னேன். உடனே தயாரிப்பாளர் போதும் இதை நான் படமாக எடுக்கிறேன் என சொல்லிவிட்டார்.
இன்றைக்கு பெரிய பட்ஜெட் கதைகளுக்கு பின்னால் தமிழ் சினிமா ஓடிக் கொண்டிருக்கிறது. மலையாள சினிமாவைப் பார்த்து நாம் அனைவரும் வியந்து கொண்டிருக்கிறோம். எதற்காக என்றால் மலையாளத்தில் மிகப் பெரிய அளவில் எழுத்தாளர்களை மதிக்கின்றனர். இந்தியாவில் அதிக அளவில் புத்தகங்கள் விற்பனையாக கூடிய மாநிலமாக தமிழகம் இருக்கிறது. திரையுலகில் கதையாசிரியர்கள் அதிகளவில் இல்லை. இந்த நிலை மாற வேண்டும். சிறைக்கு பிறகு தாய்க்கிழவி திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி பெற்றிருக்கிறது” என்றார்.
நடிகர் விக்ரம் பிரபு பேசுகையில், “இப்படியொரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய தந்தையின் திரைப்படத்திற்காக இது போன்ற விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறேன். இப்போது என்னுடைய படத்திற்கு இந்த விழா நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ‘டாணாக்காரன்’ திரைப்படத்திற்கு சிறந்த படத்திற்கான மாநில அரசு விருது கிடைத்தது. என்னுடைய பெற்றோருக்கு தெரியாமலே ‘கும்கி’ படத்தில் நடிக்கச் சென்று விட்டேன். இப்போது சிறை வரையில் நடித்திருக்கிறேன்.
சினிமாவில் நேரம், அதிர்ஷ்டம் எல்லாம் இருக்கிறது. யாருடன் திரைப்படம் நடிக்க வேண்டும்? யாருடன் பழக வேண்டும்? என பல்வேறு விதமான நுணுக்கங்கள் இருக்கின்றன. அவை அனைத்தையும் தெரிந்து கொண்டு தான் 25 திரைப்படங்கள் நடித்திருக்கிறேன். என்னுடைய தந்தை எனக்கு சொன்னது எந்தவிதமான உதவியும் செய்ய மாட்டேன் என்று. நானே சுயமாக 25 திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் உள்ள கலைஞர்கள் கூட சிறை திரைப்படத்தைப் பற்றி என்னிடம் தொலைபேசியில் பேசினார்கள். படக் குழுவில் பணியாற்றிய அனைவருடனும் ஒரு புகைப்படம் எடுத்து என்னுடைய அலுவலகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்” என்றார்.
அதை தொடர்ந்து பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “சிறை திரைப்படம் பார்த்த பிறகு நான் ஒரு வணிகரீதியிலான மதிப்பினை தயாரிப்பாளரிடம் தெரிவித்தேன். அது நடந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படத்தின் கதை, கதையாசிரியர் தமிழின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம். அதை இயக்குநர் உள்வாங்கி திரைப்படமாக்கியிருப்பது பாராட்டுதலுக்குரியது. இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர்.
அதே போல் படத்தைப் பார்த்த தமிழ் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி இருக்கின்றனர். நான் பலமுறை சொல்வேன். மற்ற மொழி ரசிகர்களை விட தமிழ் மொழி ரசிகர்கள் மாறுபட்டவர்கள். திறமைசாலிகளைக் கொண்டாடுவார்கள். இந்தப் படத்தின் இயக்குநருக்கும், எனக்கும் முதலில் சாதாரணமாக அதாவது ஒரு இயக்குநருக்கும், உதவி இயக்குநருக்குமான உறவு தான் இருந்தது. இருப்பினும் புறா வளர்ப்பு பந்தயம் விடுவதில் இருவருக்கமான இணக்கம் அதிகமானது. 2018-ம் ஆண்டு நடத்த புறா பந்தயத்தில் வெற்றி பெற்றோம்” எனத் தெரிவித்தார்.

