இன்றைய இளம்யினர் தலைமுறை 20–25 வயதிலேயே மிக வேகமாக முன்னேறுகிறார்கள் என்று நடிகர் தனுஷ் பேசினார்.
கென் கருணாஸ் இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. இதில் சுராஜ் வெஞ்சுரமுடு, தேவதர்ஷினி, அனிஷ்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பள்ளிப் பருவ வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் மார்ச் 19-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.
இந்த விழாவில் தனுஷ் பேசும்போது, “முதலில் தயாரிப்பாளர் கருப்பையாவுக்கு பாராட்டுக்கள். 23 வயது இளைஞன் சொன்ன கதையை நம்பி இந்தப் படத்தை தயாரித்தது மிகப் பெரிய தைரியம். நாளை இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றாலும், அந்த வெற்றியின் முதல் உரிமையாளர் கருப்பையா தான்.
கென் எப்போதும் அவருக்கு உண்மையாக இருக்க வேண்டும். ஒரு படத்துக்கு ஓர் அடையாளம் இருக்கும். ‘துள்ளுவதோ இளமை’ படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா எப்படி இருந்தாரோ, அதேபோல் ‘யூத்’ படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் ஒரு முக்கியமான அடையாளமாக இருக்கிறார். பணம் வாங்காமல் அவர் இசையமைத்தது தந்தது அவரது பெருமை. அவருக்கு கென் சார்பில் என் நன்றி.
படத்தில் நடித்த சுராஜ், தேவதர்ஷினி, நளினி மற்றும் மூன்று ஹீரோயின்களுக்கும் வாழ்த்துகள். அனிஷ்மா சிறை படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார் வாழ்த்துகள்.
’அசுரன்’ படத்தில் முதலில் கென்னைப் பார்த்தபோது எனக்கு நம்பிக்கை இல்லை. அவரை வேண்டாம் என்று தான் சொன்னேன். ஆனால் முதல் ஷாட்டிலேயே அவர் மிகுந்த நம்பிக்கையுடன் நடித்ததை பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். அவரை கண்டுபிடித்த பெருமை முழுவதும் வெற்றிமாறனுக்கே சேரும்.
இந்த வயதிலேயே இவ்வளவு தைரியமாக படம் எடுக்க முடிவு செய்தது பெரிய விஷயம். அவர் படமெடுக்கிறேன் என்று சொன்ன போது, நான் இப்போது வேண்டாமே என்றேன். ஆனா அதை தவறென்று நிரூபித்திருக்கிறார். முன்னாடி நாங்கள் சினிமாவுக்கு வந்த போது, சீனியர்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லுவார்கள். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது.
இந்த வயதில் பலர் வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள். ஆனால் கென் தனது கவனத்தை முழுவதும் தனது கனவு மற்றும் குடும்பத்தின் மீது வைத்திருக்கிறார். அதற்காக அவருக்கு வாழ்த்துகள். யூத் படம் பெரிய வெற்றி பெற்று, கென்னுக்கும் அவரை நம்பி வந்த முழு படக்குழுவுக்கும் ஒரு பெரிய ஆசீர்வாதமாக அமைய வேண்டும் வாழ்த்துகள்” என்று பேசினார் தனுஷ்.

