விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி தேர்தல் அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். சினிமாவில் கவனம் செலுத்தி வரும் த்ரிஷா நடிப்பில் அடுத்து சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் விஜய் – த்ரிஷா இருவரும் ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பாளர்களில் ஒருவரான கல்பாத்தி சுரேஷின் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த வீடியோ குறித்து பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். இந்நிலையில் இது தொடர்பாக விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயன் தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், “நடிகர் விஜய் த்ரிஷாவுடன் திருமணத்தில் கலந்துகொண்டார். அதில் இப்போது என்ன பிரச்சினை? அட்வைஸ் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள்.
அண்ணா உங்களுக்கு எதிரி வேறு யாருமே இல்லை அண்ணா, நீங்கள் தான் அண்ணா. அண்ணா உங்களை எவ்வளவு நம்பினோம், நீங்க போய் இப்படி பண்ணீட்டீங்களே. நடிகர் விஜயின் அரசியல் கருத்து, நிலைபாடு குறித்து நீங்கள் விமர்சிக்கலாம். அதற்கு உங்களுக்கு முழு உரிமை உண்டு. ஆனால், அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சிக்க யாருக்கும் உரிமையும் கிடையாது, தகுதியும் கிடையாது. அடுத்தவர்களை குறை சொல்லும் போது மீதி மூன்று விரல்களும் உங்களைத்தான் காட்டும், அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
விஜயின் மனைவி தனிப்பட்ட முறையில் அவரிடம் விவாகரத்து கேட்டிருக்கிறார். அவர்களுக்கு பிடித்திருந்தால் இணைந்து வாழ போகிறார்கள் இல்லாவிட்டால் விவாகரத்து பெற போகிறார்கள். அது நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும். ஒரு நல்ல தோழியாக, நண்பராக நடிகை த்ரிஷாவுடன் விஜய் திருமணத்தில் கலந்துகொண்டிருக்கலாம். மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் நம்மில் எத்தனை பேர், இதேபோல் தோழியுடன் திருமணத்திற்கும் நிகழ்ச்சிக்கும் செல்வோம். அதை யாராவது தவறாக பேசினால் எப்படி?
நடிகர் விஜய் சினிமாவில் இருக்கிறார். த்ரிஷாவும் சினிமாவில் இருக்கிறார். யதார்த்தமாக நீங்கள் திருமணத்துக்கு செல்கிறீர்களா? நானும் வரேன் என கேட்டிருக்கலாம். இதற்கு எல்லாம் அவர் விளக்கம் கொடுத்துக் கொண்டு இருந்தால், அதை விட முட்டாள்தனம் வேறு எதுவும் இல்லை என்பது விஜய்க்கு தெரியும். உங்களின் விமர்சனம் அவர்கள் குடும்பத்தில் எப்படியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை யோசியுங்கள்.
ஒருவேளை த்ரிஷாவை விஜய் திருமணம் செய்துகொள்ள போகிறார் என்றால், அதை அவர் சொல்லட்டும். அதன் பிறகு நாம் தெரிந்து கொள்வோம் மனதார வாழ்த்துவோம். கண்ணால் காண்பதும் பொய், காதல் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்.” என தெரிவித்துள்ளார்.

