சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மீதான தேசிய பாதுகாப்புச் சட்ட நடவடிக்கையை ரத்து செய்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் 10-ம் தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக ஆர்வலரும், சுற்றுச்சூழல் போராளியும், கல்வியாளருமான சோனம் வாங்சுக், லே நகரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது நிகழ்ந்த வன்முறையில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 4 பேர் உயிரிழந்தனர்.
சோனம் வாங்சுக் பேச்சால் தான் வன்முறை ஏற்பட்டதாகக் கூறி அவரை லே மாவட்ட நீதிபதி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, வாங்சுக், கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் 26-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் சிறையில் உள்ள அவரை விடுதலை செய்யும் வகையிலும், லடாக்கில் இயல்பு நிலையை திரும்ப கொண்டு வரும் வகையிலும் அவர் மீதான தேசிய பாதுகாப்புச் சட்ட நடவடிக்கையை ரத்துச் செய்வதாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (மார்ச் 14) அறிவித்துள்ளது.
மேலும் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் விரைவில் விடுதலை செய்யப்படுகிறார்.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், லடாக்கின் பல்வேறு பகுதியில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே போல், லடாக்கில் உள்ள சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
லடாக் இளைஞர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அந்த பகுதி தொழில் வளர்ச்சி, பொருளாதாரம் போன்றவற்றில் அரசு இனி கவனம் செலுத்தவுள்ளது. இந்த நடவடிக்கையால் லடாக்கில் அமைதி திரும்பி சுற்றுலாத் துறை மேம்படுவதுடன் பொதுமக்கள் வழக்கமான சூழலுக்கு திரும்புவர் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், லடாக்கிற்கு தேவையான பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வழங்கப்படுவதுடன் பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வுக்கான அரசு உறுதி பூண்டுள்ளது என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த ஜம்மு – காஷ்மீரில் பிறந்த சோனம் வாங்சுக், ஸ்ரீநகரில் உள்ள என்ஐடி கல்வி நிறுவனத்தில் பி.டெக் படிப்பை முடித்து விட்டு லடாக் மாணவர்களுக்காக கல்வி மற்றும் கலாச்சார இயக்கத்தை தொடங்கி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

