எர்ணாகுளத்தில் இருந்து மதுரை வழியாக வேளாங்கண்ணிக்கு வாரந்திர ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மதுரையில் இருந்து நேரடியாக வேளாங்கண்ணிக்கு ரயில் இயக்கப்பட வேண்டும் என நெடுங்காலமாக பல்வேறு தரப்பிலும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் அதனை சாத்தியமாக்கியுள்ளது தெற்கு ரயில்வே. அதன்படி, வரும் 18ஆம் தேதி எர்ணாகுளத்தில் இருந்தும், 19ஆம் தேதி வேளாங்கண்ணியில் இருந்தும் இந்த ரயிலின் முதல் பயணம் தொடங்குகிறது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், எர்ணாகுளம் சந்திப்பு – வேளாங்கண்ணி வாராந்திர விரைவு ரயில் (வண்டி எண் – 16363), ஒவ்வொரு புதன்கிழமை அன்றும் எர்ணாகுளத்தில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்படும். இந்த ரயில் மறுநாள் வியாழக்கிழமை காலை 11 மணியளவில் மதுரை வந்து சேரும். அங்கிருந்து 11.10 மணிக்கு புறப்பட்டு, அன்று மாலை 5.35 மணியளவில் வேளாங்கண்ணி சென்றடையும்.
மறுமார்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து வேளாங்கண்ணி – எர்ணாகுளம் சந்திப்பு வாராந்திர விரைவு ரயில் (வண்டி எண் – 16364) ஒவ்வொரு வியாழக்கிழமையன்று இரவு 7.45 மணியளவில் புறப்பட்டு, மறுநாள் வெள்ளிக்கிழமை அதிகாலை 1.20 மணிக்கு மதுரை வந்து சேரும். அங்கிருந்து 1.25 மணிக்கு புறப்பட்டு, அன்று காலை 11.55 மணிக்கு எர்ணாகுளம் சந்திப்பை சென்றடையும்.
இந்த இரு ரயில்களும் கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரை, காயங்குளம், கருநாகப்பள்ளி, சாஸ்தன்கோட்டை, கொல்லம், குண்டாரா, கோட்டாரக்கரை, புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக செல்லும்.
இது குறித்து ரயில் ஆர்வலர் அருண்பாண்டியன் கூறுகையில், “மதுரையிலிருந்து வேளாங்கண்ணிக்கு நேரடி ரயில் சேவை வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தெற்கு ரயில்வே நிரந்தர வாராந்திர ரயிலாக இந்த சேவையை தொடங்குகிறது. இதன் மூலம் தென் மாவட்ட மக்கள் வேளாங்கண்ணிக்கு நேரடியாக செல்வதற்குரிய வாய்ப்பு உருவாகி உள்ளது.
மதுரை ரயில்வே வரலாற்றிலேயே முதன் முறையாக மதுரையிலிருந்து வேளாங்கண்ணிக்கு நேரடி ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியதாகும். வாராந்திர ரயிலாக தற்போது இயக்கப்பட்டாலும், மக்களின் வரவேற்பைப் பொறுத்து அடுத்த சில மாதங்களில் கூடுதல் நாட்கள் இயக்குவதற்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் முன்வரும்” என நம்பிக்கை தெரிவித்தார்.

