துபாய் பன்னாட்டு விமான நிலையம் அருகே ட்ரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியதில் இந்தியர் உள்பட 4 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலில், இரண்டு கானா நாட்டினருக்கும், ஒரு வங்கதேச நபருக்கும், ஒரு இந்தியருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டதாக துபாய் ஊடகம் தெரிவித்துள்ளது. எனினும், விமானங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருவதாக துபாய் விமானத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஈரான் மீதான இஸ்ரேல் -அமெரிக்கா கூட்டுத் தாக்குதல் தீவிரமடைந்த நிலையில், அமெரிக்கா ராணுவத் தலங்கள் இருக்கும் கத்தார், சவுதி அரேபியா, சார்ஜா, அபுதாபி, பஹ்ரைன் போன்ற அரபு நாடுகளை குறி வைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
நேற்றைய தினம், விரைவில் போர் முடிவுக்கு வரும் என்று தெரிவித்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கச்சா எண்ணெய் விநியோகத்தில் தடை ஏற்படுத்தும் விதமாக ஈரானின் செயல்பாடுகள் இருந்தால், மோசமான விளைவுகளையும், அதிரடியான தாக்குதலையும் அந்நாடு எதிர் கொள்ள வேண்டும் என அமெரிக்கா எச்சரித்திருந்தது.
இந்நிலையில், ஈரானின் தெஹ்ரான் பகுதியில் அமெரிக்கா தொடர்ந்து தாக்கி வருவதால், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானும் அமெரிக்க ராணுவ தலங்களை கொண்டிருக்கும் நாடுகள் மீது ட்ரோன் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய்யை கடல் வழியாக ஏற்றுமதி செய்ய ‘ஹார்மூஸ் ஜலசந்தி’ முக்கிய வழித்தடமாகப் இருக்கிறது. தொடர்ந்து ஐந்து நாள்களாக இந்த வழிப்பாதையையும் ஈரான் முடக்கியுள்ளது. மேலும், அரபு நாடுகளில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியதால், அங்கு உற்பத்தி முடக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, தெற்கு மற்றும் கிழக்காசிய நாடுகள் கடும் எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பட்டுக்கு ஆளாகியுள்ளன. இந்தியாவிலும், சமையல் எரிவாயு இல்லாமல் பல உணவகங்கள் மூடப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் ஏற்றுமதி குறைந்துள்ளதால், பல நாடுகளும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
இந்த நேரத்தில், ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை வைக்க முயன்ற 16 ஈரான் போர் கப்பல்களைத் தாக்கி அளித்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

