திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான ஃபரூப் அப்துல்லா மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலிருந்து அவர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.
ஜம்முவின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் தேசிய மாநாட்டுக் கட்சியை சேர்ந்த பிரமுகரின் மகளின் திருமண விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா கலந்துகொண்டார். அவருடன் ஜம்முவின் துணை முதலமைச்சர் சுரேந்தர் சௌத்ரி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.
அப்போது திடீரென அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ஃபரூக் அப்துல்லாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதை பார்த்த பாதுகாப்பு அதிகாரிகளும், காவல்துறையினரும் சட்டென ஃபரூக் அப்துல்லாவை இழுத்தனர். இதனால் அவர் நூலிழையில் உயிர் தப்பினார். பின்னர் சுட முயன்ற நபரையும் அவர்கள் மடக்கிப் பிடித்தனர். அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவருடைய பெயர் கமல் சிங் ஜம்வால் (68) என்பது தெரியவந்தது.
கடந்த 20 வருடங்களாக தான் ஃபரூப் அப்துல்லாவை கொலை செய்ய முயற்சித்து வந்ததாகவும், இந்த முறை சந்தர்ப்பம் அமைந்தும் தனது முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும் பிடிபட்ட நபர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிகிறது.
முன்னாள் முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் இப்படியொரு அசம்பாவித சம்பவம் நடந்திருப்பது ஜம்முவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த இடத்தில் அந்த நபர் எப்படி நுழைந்தார் என்றும் கேள்விகளும் எழுந்துள்ளன. ஃப்ருக் அப்துல்லாவிற்கு Z+ பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தபோதும், சம்பவம் நடந்தபோது காவல்துறையினரும், பாதுகாப்பு அதிகாரிகளும் அவர் அருகில் இல்லை என்று சொல்லப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஃபருக் அப்துல்லாவின் மகனும், ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சருமான உமர் அப்துல்லா, எல்லாம் வல்ல இறைவன், தனது தந்தையை அதிர்ஷ்டவசமாக காப்பாற்றியதாக தெரிவித்துள்ளார். அவருடைய எக்ஸ் பதிவில், “அல்லாஹ் கருணையுள்ளவர். என் தந்தை துப்பாக்கிச்சூட்டிலிருந்து தப்பியுள்ளார். துப்பாக்கியுடன் ஒரு நபர் அவர் அருகில் வந்து சுட முயன்றபோதும், அந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
தற்போது Z+ NSG பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சரை ஒருவர் எவ்வாறு நெருங்க முடிந்தது உள்ளிட்ட நிறைய கேள்விகள் உள்ளன. அந்த நேரத்தில் என் தந்தையுடன் இருந்த துணை முதலமைச்சர் மற்றும் நசீர் சோகாமி இருவரும் பாதுகாப்பாகவும், நலமுடனும் இருக்கின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.

