திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகருமான தக்காளி சீனிவாசன் உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூரில் காலமானார்.
தமிழ் திரைப்படத் துறையில், படத் தயாரிப்பு, இயக்கம், நடிப்பு, இசை, வசனம் பன்முக கலைஞராக திகழ்ந்தவர் தக்காளி சீனிவாசன். இவர், கடந்த 1987-ஆம் ஆண்டு பிரபு, அம்பிகா நடிப்பில் வெளிவந்த “இவர்கள் வருங்கால தூண்கள்” திரைப்படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கதாநாயகனாக பிரபு, கதாநாயகியாக சரண்யாவை வைத்து “மனசுக்குள் மத்தாப்பு” என்ற படத்தை தயாரித்தார். அந்த படம், அந்த காலகட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றது.
திரைப்படத் தயாரிப்பாளராக வெற்றி படங்களை கொடுத்த தக்காளி சீனிவாசன், அடுத்து இயக்குநர் வேலு பிரபாகரன் இயக்கிய “நாளைய மனிதன்” திரைப்படத்தில் முதன் முதலாவதாக இசையமைப்பாளராக தன் திறமையை காட்டினார். அதைத்தொடர்ந்து மீண்டும் இயக்குநர் வேலு பிரபாகரனுடன் இணைந்து, நாளைய மனிதனின் இரண்டாம் பாகமான “அதிசய மனிதன்” திரைப்படத்திற்கும் இசையமைத்தார்.
தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, திரைப்படத்தின் இயக்குனராக வேண்டும் என்கிற முனைப்போடு அவர் இயக்கிய திரைப்படம், கடந்த 1991-ஆம் ஆண்டு வெளிவந்த “ஜென்ம நட்சத்திரம்”. இன்றைய நவநாகரிக சூழலில் பல்வேறு விதமான ஹாரர் திரைப்படங்கள் வந்தபோதிலும், அன்றைய சூழலில் ஹாரர் படம் என்றாலே “ஜென்ம நட்சத்திரம்”தான் என்று சொல்லும் அளவிற்கு அப்படத்தினை சிறப்பாக இயக்கியிருந்தார் தக்காளி சீனிவாசன். மேலும் 90ஸ் கிட்ஸ்கள், அந்த படத்தை பார்த்து பல நாள்கள் இரவில் பயத்தில் தூங்காமல் கூட இருந்தார்கள் என சொன்னால் அது மிகையாகாது.
”விட்னஸ்” திரைப்படத்தை அவரே தயாரித்து, இயக்கி. நடித்தும் இருந்தார். மேலும் இயக்குநர் சித்ரா லட்சுமணன் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வெளியான சூரசம்ஹாரம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தையும் தக்காளி சீனிவாசன் ஏற்று நடித்திருந்தார்.
வாழ்க்கையின் இறுதி ஆண்டுகளில் அவர் ஒரு ஆசிரமம் நடத்தி, தத்தெடுத்த குழந்தைகளுடன் மனிதநேய சேவையில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக, பெங்களூரில் அவர் காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தக்காளி சீனிவாசனின் இறுதிச் சடங்கு பெங்களூரில் இன்று நடைபெற உள்ளன.

