மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக ஆஃப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் தொடங்கியதை அடுத்து, மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக இது தற்சமயம் சர்வதேச கிரிக்கெட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. முன்னதாக இந்த தாக்குதல் சம்பவம் காரணமாக மத்திய கிழக்கில் விமான சேவையானது முற்றிலுமாக முடங்கியதன் காரணமாக, டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர்கள் நாடு திரும்ப முடியாத நிலையும் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்சமயம் ஆஃப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் மற்றும் டி20 தொடர் மார்ச் 13ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் உலகக் கோப்பை தொடருக்கு பின் இவ்விரு அணிகளும் மோதும் போட்டி என்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருந்தது.
ஆஃப்கானிஸ்தான் – இலங்கை தொடர் ஒத்திவைப்பு
இந்த நிலையில் விமான போக்குவரத்து இடையூறுகள், பாதுகாப்பு கவலைகள் மற்றும் போர் பதற்றங்கள் காரணமாக இரு நாடுகளின் கிரிக்கெட் வாரியமும் இணைந்து இத்தொடரை ஒத்திவைக்கும் முடிவை எடுத்துள்ளன. இதன் மூலம் இலங்கைக்கு எதிரான ஆஃப்கானிஸ்தான் அணி நடத்த இருந்த முதல் இருதரப்பு கிரிக்கெட் தொடரானது, நடைபெற்று வரும் போர் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏனெனில் பாதுகாப்பு காரணங்கள் மற்றும் அரசியல் சூழ்நிலைகள் காரணமாக ஆஃப்கானிஸ்தான் அணியால் இன்னும் சொந்த மண்ணில் எந்தவொரு சர்வதேச போட்டிகளையும் நடத்தமுடியாத நிலை உள்ளது. இதன் காரணமாகவே அவர்கள் தங்களின் சொந்த போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகம் அல்லது இந்தியாவில் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்சமயம் அதற்கும் சிக்கல்கள் ஏற்பட்டிருப்பது அந்நாட்டு கிரிக்கெட்டின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
புதிய கேப்டன் மற்றும் புதிய பயிற்சியாளர்
இந்தத் தொடரை ஒத்திவைத்தன் காரணமாக ஆஃப்கானிஸ்தான் அணியின் இப்ராஹிம் ஜத்ரான் தனது கேப்டன் பதவிக்காக காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் டி20 உலகக் கோப்பை தோல்விக்கு பின் ரஷித் கான் ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் பதவிலிருந்து நீக்கப்பட்டு, இப்ராஹிம் ஜத்ரானுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026: தொடரின் சிறந்த அணியில் சஞ்சு சாம்சன், ஜஸ்பிரித் பும்ரா
உலகக் கோப்பை நாயகன் சஞ்சு சாம்சனுக்கு உற்சாக வரவேற்பளித்த கேரள மக்கள்!
அதேசமயம் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டனுக்கும் இதுவே முதல் தொடராகும். முன்னதாக உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பை இழந்த நிலையில், சனத் ஜெயசூர்யா தனது பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகினார். இதனையடுத்து இலங்கை அணியின் புதிய பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

