தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் செயல்பட்டு வரும் பிரபல எண்ணெய் மில் நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள டயாபர் (Diapers) குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எட்டயபுரத்தில், புதிய பேருந்து நிலையம் அருகே பிரபல எண்ணெய் மில் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த மில் வளாகத்தில், ஏவிஎம் மணியின் மகன் சங்கர் மாரிமுத்துவிற்கு சொந்தமான கமலா ஹெல்த் கேர் நிறுவனத்தில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பயன்படுத்தும் சுகாதாரப் பொருட்களான டயாபர்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
அந்த ஆலையில் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், ஆலையின் வெளியே இருந்த மின் வாரிய டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்ததாக கூறப்படுகிறது. அதிலிருந்து பறந்த தீப்பொறிகள் டயாபர் தயாரிப்பிற்காக குடோனில் குவித்து வைக்கப்பட்டிருந்த காட்டன் பஞ்சு மீது விழுந்ததால், தீ வேகமாக பரவியுள்ளது. அடுத்த சில நிமிடங்களிலேயே குடோன் முழுவதும் தீ பரவி, அந்த பகுதியில் புகை மண்டலமாக மாறியுள்ளது.
அதனை கண்ட ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த, தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தனர்.
இதற்காக, தீயணைப்புத் துறை அதிகாரி கருணாகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 6-க்கும் மேற்பட்ட அரசு தீயணைப்பு வாகனங்கள், 2 தனியார் தீயணைப்பு வாகனங்கள் என மொத்தம் 8 வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, டயாபர் குடோனில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை எனக் கூறப்படுகிறது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு கனடா, ஜப்பான், லண்டன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுமார் 100 டன் அளவிலான பஞ்சு மற்றும் டயாபர் தயாரிப்பிற்கான மூலப்பொருட்கள் இந்த ஆலைக்கு கொண்டு வரப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த பஞ்சுகள் அனைத்தும் தீ விபத்தில் எரிந்து சாம்பலாகியுள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.3 கோடி இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இதனால், தீ விபத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

