திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழக விடுதியில் மாணவி உயிரை மாய்த்துக் கொண்டதை அடுத்து, உறவினர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியை அடுத்த வளவநல்லூரை சேர்ந்த சுப்பிரமணியன்- மங்கையர்க்கரசி தம்பதியின் 2-வது மகள் சோபியா. 21 வயதான இவர், திருவாரூர் அருகே உள்ள நீலக்குடியில் இயங்கி வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில், இன்டக்ரேட்டட் கணிதவியல் படிப்பை நான்காம் ஆண்டு படித்து வந்தார். பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி சோபியா, விடுதி அறையில் உயிரை மாய்த்து கொண்டார்.
தகவல் அறிந்து சென்ற நன்னிலம் காவல் துறையினர், மாணவி சோபியாவின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடயே, மாணவி இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், மத்திய பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து, மாணவியின் உடலை கேட்டு போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். பின்னர், மாணவியின் உடலை காட்ட கோரி, அவர்கள் தரையில் அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் திருவாரூர் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். மாணவியின் உடல், வீடியோ பதிவுடன் இரண்டு மருத்துவ குழுக்கள் தலைமையில் பிரேத பரிசோதனை நடத்தப்படும் என்றும், மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பின் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார். இதையடுத்து, மாணவியின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

