சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தொழிலாளர்களை வாளால் வெட்டிய வழக்கில் கைதான இளைஞர், உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சீயோன் நகரில் கடந்த 6 ஆம் தேதி இருவரை மர்ம நபர்கள் வாளால் வெட்டினர். இந்த சம்பவத்தின் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தாக்குதலில் காயமடைந்த மானாமதுரை ஜீவாநகர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், ஆதனூர் அழகர்சாமி ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக மானாமதுரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த ஆகாஷ் டெலிசன் மற்றும் குணா என இருவரை கைது செய்தனர்.
அப்போது ஆகாஷ் டெலிசன், கீழே விழுந்ததில் வலது காலில் காயம் ஏற்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன் தினம் மானாமதுரை குற்றவியல் நீதித்துறை நடுவர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின்னர், ஆகாஷ் மற்றும் குணா ஆகிய இருவரையும் 18 ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, ஆகாஷ் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்ள சிறைவாசிகளுக்கான சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை ஆகாஷ் டெலிசனுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். ஆனால், தனது மகனை காவலர்கள் அடித்து கொலை செய்து விட்டதாக அவரது தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.
ஆகாஷின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என்று கூறி உறவினர்கள் மானாமதுரையில் பேருந்து நிலையம் அருகே மதுரை – ராமேஸ்வரம் நான்குவழிச்சாலையில் நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறை அதிகாரிகளோ, மாவட்ட ஆட்சியரோ நேரில் வந்து பேச வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதன்காரணமாக மானாமதுரை – ராமேஸ்வரம் சாலையில் சுமார் 5 கிலோ மீட்டருக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
அதன்பின்னர் மதுரையில் இருந்து வரும் வாகனங்கள் திருப்புவனம், சிவகங்கை, இளையான்குடி, பரமக்குடி வழியாக ராமேஸ்வரத்திற்கும், ராமேஸ்வரத்தில் இருந்து வரும் வாகனங்கள் பரமக்குடி, பார்த்திபனூர், அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கும் திருப்பி விடப்பட்டன.
தொடர்ந்து இரவு வரை 10 மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், மானாமதுரையில் காவல்துறை பாதுகாப்பில் இருந்த இளைஞர் உயிரிழந்ததற்கு விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். தென் மாவட்டங்களில் அதிகரித்து வரும் சாதிய வன்முறைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் காவல் நிலைய மரணங்களை தடுக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இது 26ஆவது காவல் நிலைய மரணம் என்று சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான ஹென்றி திபேன் கண்டனம் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஹென்றி திபேன் வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

