தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதன் மூலம் 5 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
கும்பகோணம் தாலுகா திருச்சேறை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (25). இவர் கடந்த மார்ச் 3 ஆம் தேதி இரவு 7.15 மணி அளவில், வீட்டின் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது, எதிர்பாராமல் ரயில் மோதி பலத்த காயம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தஞ்சையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்ச் 3ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அங்கு டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்த மணிகண்டன் மூளைச்சாவு அடைந்தார். இதனையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறுவது தொடர்பாக அவரது சகோதரி மாலினி, சகோதரர் பிரபு, மற்றும் உறவினர் பூமிநாதன் ஆகியோரிடம் டாக்டர்கள் எடுத்துரைத்தனர். பின்னர் அவரது உடல் உறுப்புகளை தானம் அளிக்க அவரது குடும்பத்தினர் அனைவரும் ஒப்புதல் அளித்தனர். அதன்படி, மணிகண்டனின் உடலில் இருந்த கல்லீரல், சிறுநீரகங்கள், கருவிழிகள், தோல் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.
கல்லீரல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், இரண்டு சிறுநீரகங்கள் திருச்சியில் உள்ள இரு தனியார் மருத்துவமனைகளுக்கும், கருவிழிகள் தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கும், தோல் தனியார் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன.
உடல் உறுப்புகள், தஞ்சாவூர் மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் காவல் துறையினர் உதவியுடன் அந்தந்த மருத்துவமனைகளுக்கு விரைவாக அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு மணிகண்டனின் உடல் உறப்புகள் 5 பேருக்கு பொருத்தப்பட்டன.
இதனிடையே, மணிகண்டன் உடலுக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பூவதி தலைமையில் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் அரசு மரியாதை செய்தனர். மணிகண்டன் உடல் தானத்தின் மூலம் 5 நபர்கள் மறு வாழ்பு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

