நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடமிருந்து விவாகரத்து கேட்டு அவரது மனைவி சங்கீதா அண்மையில் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் விஜய் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்திருந்தார். குறிப்பாக வேறொரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருக்கிறார் என குறிப்பிட்டிருந்தார்.
சங்கீதாவின் குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று முன் தினம் நடைபெற்ற திருமண நிகழ்வில் நடிகை த்ரிஷாவுடன் இணைந்து ஒரு நிற பட்டாடையில் விஜய் கலந்துகொண்டார். இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் விஜய் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்திருக்கிறார்.
அந்த மனுவில், விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில், நீலாங்கரை வீட்டில் அனுமதிக்க விஜய் மறுக்கிறார் என குற்றம்சாட்டியுள்ளார். மேலும், விவாகரத்து வழக்கு முடியும் வரை, தன்னை சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் தங்கியிருக்க விஜய் அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். “தவெக தலைவர் விஜய் தங்கியிருக்கும் வீட்டில் எனக்கும் சரிபாதி பங்கு இருக்கிறது” என சங்கீதா அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
விவாகரத்து முடிந்து வேறு வீட்டிற்கு செல்லும் வரை நீலாங்கரை வீட்டில் அனுமதிக்க வேண்டும். நீலாங்கரை வீட்டில் அனுமதிக்க கோரினால், வழக்கறிஞர் மூலமாக விஜய் தரப்பினர் மிரட்டுவதாக சங்கீதா குற்றம்சாட்டியுள்ளார். ஏற்கனவே தாக்கல் செய்த முதல் மனுவில் நியாயமான ஜீவனாம்சம் கோரியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
மனுவில், அந்த வீடு தான் தங்களது திருமண வாழ்க்கையின் முக்கியமான இல்லமாக இருப்பதாகவும், வழக்கு முடிவடையும் வரை அங்கு தங்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதற்கு மாற்றாக, சமமான வசதி கொண்ட மற்றொரு வீடு வழங்கப்பட வேண்டும் என்பதையும் கோரியுள்ளார்.
மேலும், நடிகர் விஜயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் மன உளைச்சல்கள் காரணமாகவே இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்றதாகவும், திருமண உறவு முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் நாட்களில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

