எல்.கே.சுதீஷ் எம்.பி பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ததை ‘வாரிசு அரசியல்’ என்று விமர்சனம் செய்தவர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலடி கொடுத்துள்ளார்.
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில், அக்கட்சிக்கு மாநிலங்களவை தேர்தலில் ஒரு சீட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் தேர்வு செய்யப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், “பல ஆண்டுகளுக்கு முன்பாகவே தேமுதிகவுக்கு மாநிலங்களை சீட் கிடைத்திருக்க வேண்டியது. ஆனால் காலத்தாமதம் ஏற்பட்டு, தற்போது 2026ஆம் ஆண்டில் சாத்தியம் ஆகியுள்ளது. இந்திய அளவில் மாநிலங்களவை எம்.பி-யாக ஜனநாயக கடமை ஆற்றவுள்ள சுதீஷுக்கு எனது வாழ்த்துக்கள்” என்று கூறினார்.
தொடர்ந்து ‘வாரிசு அரசியல்’ குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “சின்ன பசங்க எல்லாம் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. கட்சி ஆரம்பித்த முதல் நாளிலிருந்து சுதீஷ் பாடுபடவில்லையா? உழைக்கவில்லையா? கேப்டனுக்கும், எனக்கும் துணை நிற்கும் அவருக்கு சீட் கொடுக்கக் கூடாதா? அந்த எம்.பி. பதவியில் அமர அவருக்கு அருகதை இல்லையா? உரிமை இல்லையா?” என காட்டமாக பதிலளித்தார்.
இதையும் படிங்க: மாநிலங்களவை தேர்தலில் அன்புமணி ராமதாஸ், எல்.கே சுதீஷ் போட்டி
மேலும் பேசிய அவர், “விமர்சிப்பவர்கள் விமர்சித்துக் கொண்டேதான் இருப்பார்கள். ஆனால் சுதீஷ் இந்த கட்சிக்காக ஆரம்பத்தில் இருந்தே பாடுபட்டவர். அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது மிகவும் சரியானது. சுதீஷுக்கு பதவி பெற அனைத்து உரிமையும், தகுதியும் உள்ளது.
வாரிசு அரசியல் என்ற விமர்சனத்தை மறுத்து, கட்சி தொண்டர்களின் விருப்பத்தின்பேரில் கடந்த தேர்தலில் விஜய பிரபாகரன் போட்டியிட்டார். குடும்பத்தில் இருந்து வேறு யாரும் கட்சிக்கு வரவில்லை. தேமுதிகவுக்கு சம்பந்தமே இல்லாத நபர்கள், கேப்டனின் ஆன்மாவை பற்றி பேசி கொண்டிருப்பது நகைப்புக்குரியது. கடைக்கோடி தேமுதிக தொண்டர்கள் தான் கேப்டனின் ஆன்மா. ஒட்டுமொத்த தொண்டர்களும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
அதேபோல, தேமுதிகவின் வாக்கு சதவீதம் குறித்து விமர்சிப்பவர்கள், இக்கட்சி யாரால் தொடங்கப்பட்டது? அதன் கட்டமைப்பு என்ன? என்பதை தெரிந்து கொண்டு பேச வேண்டும். காழ்புணர்ச்சியால் சொல்லப்படும் பொது விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது” என்றார் பிரேமலதா.

