அத்தோ சாப்பிட்டதற்கு பணம் கேட்ட விவகாரத்தில், கடையின் உரிமையாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் அத்தோ என்ற பர்மா நாட்டின் உணவு விற்பனை செய்யப்படுவது வழக்கம். குறிப்பாக, வடசென்னையில் பல அத்தோ கடைகள் இயங்கி வருகின்றன. இதனிடையே, சென்னை வியாசர்பாடி இந்திரா காந்தி நகரைச் சேர்ந்த பாலமுருகன் (47) என்பவர், அப்பகுதியில் அத்தோ கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும், அமமுக கட்சியில் பெரம்பூர் துணைப் பகுதி செயலாளராகவும் அவர் உள்ளார்.
இவரது வீட்டின் கீழ்தளத்தில் அவரது அண்ணன் ரவி குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அதிகாலை 3 மணி அளவில் இவர்களது வீட்டின் வெளியே பாட்டில் உடைவது போன்று பலத்த சத்தம் கேட்டுள்ளது.
உடனே, கீழ் தளத்தில் வசிக்கும் ரவி ஓடி வந்து பார்த்தபோது, அங்கு பீர்பாட்டில் உடைந்து தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்துள்ளது. உடனே, ரவி கூச்சலிட்டு தனது தம்பி பாலமுருகனை அழைத்து, தண்ணீர் ஊற்றி தீயை அணைத்துள்ளனர்.
மேலும், இது குறித்து உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இரவு ரோந்து பணியில் இருந்த எம்.கே.பி. நகர் காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.
கிடைத்த சிசிடிவி பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இன்று காலை வியாசர்பாடி கருணாநிதி சாலை 4-ஆவது தெருவைச் சேர்ந்த தனுஷ் ராஜ் (19), அவரது அண்ணன் மோனிஷ் ராஜ் (20), வியாசர்பாடி எஸ்.ஏ காலனி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (19), புளியந்தோப்பு ஆடுதொட்டி பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்கின்ற சேட்டு (21) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட நால்வரிடமும் காவல்துறையினர் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், அண்ணன் தம்பிகளான தனுஷ் ராஜ் மற்றும் மோனிஷ் ராஜ் இருவரும், கடந்த இரு தினங்களுக்கு முன்பு, பாலமுருகன் நடத்தி வரும் அத்தோ கடையில் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது.
அப்போது பாலமுருகன், அவர்களை அடித்ததாக கூறப்படுகிறது. மேலும், அக்கம் பக்கத்தினரும் தனுஷ், மோனிஷ் ஆகிய இருவரையும் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் மது அருந்திய இளைஞர் – டிக்கெட் கேட்ட டிடிஆரை சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு
இதனால் ஆத்திரமடைந்த சகோதரர்கள் இருவரும், தங்களது இரு நண்பர்களை சேர்த்துக்கொண்டு பாலமுருகன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த எம்கேபி நகர் போலீசார், தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

