இலக்கை குறைந்த நேரத்தில் அடைந்து முதல் பரிசு பெற்ற காளையின் உரிமையாளருக்கு ரூ.1.11 லட்சம் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் காளைகள் முட்டியதில் 15 பேர் காயமடைந்தனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பழைய காட்பாடி பகுதியில் ஸ்ரீ பொன்னியம்மன் மற்றும் ஸ்ரீ கோட்டையம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் 76-வது ஆண்டு விழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவிழாவை காண ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர். திருவிழாவை முன்னிட்டு மாடுகள் ஓடும் பாதையின் இருபுறமும் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த விழாவில் வேலூர், திருப்பத்தூர் , ராணிப்பேட்டை , கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் இருந்தும் மொத்தம் 219 காளைகள் பங்கேற்றன.
விழா தொடங்கி, வாடிவாசலில் இருந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இலக்கை குறைந்த நேரத்தில் அடைந்த காளைகளுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அதன்படி முதல் பரிசாக ரூ.1,11,000, இரண்டாவது பரிசாக ரூ.90,001, மூன்றாவது பரிசாக ரூ.80,001, நான்காவது பரிசாக ரூ.70,001 வழங்கப்பட்டது. மொத்தம் 67 காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
எருது விடும் நிகழ்ச்சியை காண சாலையின் இருபுறங்களிலும் பொதுமக்கள் திரண்டனர். மேலும் அருகிலுள்ள வீடுகளின் மொட்டைமாடி மற்றும் மேல்தளங்களில் நின்று பொதுமக்கள் ஆரவாரம் செய்து காளைகள் வேகமாக ஓட உற்சாகக் கூச்சலிட்டனர்.
இந்நிகழ்ச்சியின் போது காளைகள் முட்டியதில் 11 பேர் லேசான காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த முதலுதவி சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் 4 பேர் படுகாயம் அடைந்ததால் அவர்கள் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பழைய காட்பாடி நாட்டாண்மை பெருமாள், தர்மகர்த்தா சீனிவாசன், பெரியதனம் காண்டீபன் உள்ளிட்ட விழாக்குழுவினர் செய்திருந்தனர். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருவிழாவை முன்னிட்டு காலை 6 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சித்தூர் பேருந்து நிறுத்தம் முதல் பிரம்மபுரம் செல்லும் சாலை முழுவதுமாக போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டது. இதனால் பிரம்மபுரம் செல்லும் வாகனங்கள் ஓடை பிள்ளையார் கோவில் ஜங்ஷன் வழியாக திருப்பி அனுப்பப்பட்டு, அக்சீலியம் ரவுண்டானா அருகிலுள்ள புத்துக்கோயில் வளைவு வழியாக பிரம்மபுரம் காவல் நிலைய ஜங்ஷனை அடைந்தன.
மேலும் சித்தூரிலிருந்து திருவலம் செல்லும் வாகனங்கள், பிரம்மபுரம் சாலையை தவிர்த்து வள்ளிமலை சாலை வழியாக பள்ளிகுப்பம், சேர்க்காடு வழியாக திருவலத்தை அடையும் வகையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

