விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த 2006 மற்றும் 2011 சட்டமன்றத் தேர்தல்களிலேயே இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை பெற்றுவிட்டது என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
சட்டமன்றத் தேர்தலை நெருங்குவதை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், அதிக தொகுதிகளை கேட்டு வலியுறுத்தி வந்ததால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது. இதையடுத்து, ஒருவழியாக 28 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை சீட்டுடன் இந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
காங்கிரஸுக்கு கடந்த தேர்தலை விட அதிகமான சீட்டுகள் ஒதுக்கப்பட்டதால், திமுக கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் பேரத்தில் இறங்கியுள்ளன. அந்த வகையில், விசிகவும் இரட்டை இலக்கத்தில் இந்த முறை தொகுதி கேட்கும் என தகவல்கள் வெளியாகிய வருகின்றன.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவனிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில்தான் தொடரும்; அவர்கள் வெளியேற மாட்டார்கள் என ஏற்கனவே கூறினேன். அது இன்று உறுதியாகிவிட்டது. இதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவரவர் வலிமைக்கு ஏற்ப கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்துவது வழக்கம்.
எங்கள் வலிமைக்கு ஏற்ப என்ன இயலுமோ அதை நாங்கள் கேட்டு பெறுவோம். எத்தனை இடங்கள் விசிகவிற்கு கிடைக்கும் என்பது பேச்சுவார்த்தைக்கு பிறகுதான் தெரியவரும். தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி தோன்றுவதற்கு முன்பே கூட்டணி பேச்சுவார்த்தையில் அதிக சீட்டுகளை கேட்டவர்கள் நாங்கள்.
2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவில் தங்களுக்கு 12 இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால், கூட்டணியில் அதிக கட்சிகள் இருந்தால் அழுத்தத்தின் காரணமாக அது 10ஆக குறைக்கப்பட்டது. அப்போதே நாங்கள் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை பெற்றுவிட்டோம்.
அதேபோல், 2006 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 9 தொகுதி, புதுச்சேரியில் ஒரு தொகுதி என 10 தொகுதிகள் விசிகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போதெல்லாம் தமிழக வெற்றி கழகம் என்கிற கட்சியே கிடையாது” என திருமாவளவன் கூறினார்.
நாங்குநேரி சம்பவம்
முன்னதாக நாங்குநேரி சம்பவம் குறித்து பேசிய திருமாவளவன், “நாங்குநேரி தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த ஜானின் குடும்பத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக 2.68 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், வட மாநில இளைஞர் குடும்பத்திற்கு 1 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.10,000 வழங்கியுள்ளோம்.
இந்த படுகொலைக்கு பின்னணியில் சில சமூக விரோதி கும்பல் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் சில இளைஞர்களை கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்றாலும் அவர்களை தூண்டியவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்தப் பகுதியில் உடனடியாக காவல் நிலையத்தை திறக்க வேண்டும். தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல், சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் என்ற கிராமத்தில் புகுந்து ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனை கண்டும் காணாமல் காவல்துறையினர் மெத்தனமாக செயல்படுகின்றனர்” என அவர் கூறினார்.

