இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு நேபாளத்தில் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், அந்நாட்டின் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அமைச்சர்கள் கூண்டோடு ராஜிநாமா செய்தனர்.
அதைத் தொடர்ந்து நேபாளத்தின் இடைக்கால பிரதமராக அந்நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷிலா கார்கி பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் தொடர்ச்சியாக, இளைஞர்கள் போராட்டத்தை கைவிட்ட நிலையில் நேபாளம் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
இந்த சூழலில், நேபாளத்தில் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்றப் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (மார்ச் 05) காலை 6.45 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 4.45 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் உடனடியாக வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். நேபாளத்தில் 1.9 கோடி பேர் வாக்களிக்கத் தகுதிப் பெற்றுள்ளனர். அனைவரும் எளிதில் வந்து வாக்களிக்கும் வகையில் அந்நாட்டின் தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. மொத்தமாக 20,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 6வது நாளாக தொடரும் போர்: ஈரானிய போர்க்கப்பலை மூழ்கடித்த அமெரிக்கா
தேர்தலை முன்னிட்டு நேபாளம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சாலைகளில் ராணுவத்தினர் தீவிரப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பிரச்சாரம் மற்றும் பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை
மொத்தம் 275 உறுப்பினர்களைக் கொண்ட நேபாளம் நாடாளுமன்றத்தில் 165 பேர் வாக்குப்பதிவு மூலமாகவும், 110 பேர் விகிதாச்சார முறையிலும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இந்த தேர்தலில் வரலாறு காணாத அளவில் கடும் போட்டி நிலவுகிறது. நேபாளத்தை யார் ஆளப் போகிறார் என்பது இன்றிரவுக்குள் தெரிய வரும்.
மும்முனை போட்டி
நேபாளத்தில் நடைபெற்று வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 2022- ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய சுதந்திரக் கட்சி, நேபாள காங்கிரஸ் கட்சி, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. குறிப்பாக, நேபாளத்தில் நீண்ட காலமாக ஆட்சிச் செய்த நேபாள காங்கிரஸ் கட்சி, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தேசிய சுதந்திரக் கட்சி கடும் சவாலாக உள்ளது.
அதிரடி காட்டும் ஷா
நேபாளத்தில் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தவராக மாறிய ராப்பர் பாலேந்திர ஷா, கடந்த 2022- ஆம் ஆண்டு நடந்த தலைநகர் காத்மாண்டு மேயர் தேர்தலில் தேசிய சுதந்திர கட்சியின் சார்பில் போட்டியிட்டு முன்னாள் பிரதமர் சர்மா ஒலியை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
தற்போது நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசியல் கட்சிகள் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து பொதுமக்களை நீண்ட நாட்களாக ஆண்ட அரசியல் கட்சிகளுக்கு எதிராகத் திருப்பியுள்ளார். அனைவருக்கும் கல்வி, மருத்துவம், பொருளாதாரம் ஆகியவற்றை மையமாக வைத்து ஷா பிரச்சாரம் மேற்கொண்டது இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
35 வயதே ஆன ஷா, கடந்த ஆண்டு நடந்த நேபாளத்தில் நடந்த இளைஞர்களின் போராட்டத்திற்கு அடித்தளமிட்டவர் என்று பலராலும் சொல்லப்படுகிறது.

