அதிமுக சார்பில் பாமகவிற்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளராக அன்புமணி ராமதாஸும், திமுக சார்பில் தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் எல்.கே சுதீஷும் போட்டியிடுகின்றனர்.
தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் காலியாகும் 37 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையை பொறுத்தவரையில் தமிழ்நாட்டிற்கு மொத்தம் 18 இடங்கள் உள்ளன. அதில் சுழற்சி முறையில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெறும்.
அந்த வகையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், என்.வி.என். கனிமொழி சோமு, தம்பிதுரை, ஜி.கே. வாசன் ஆகிய ஆறு பேரின் பதவி காலம் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
காலியாகும் இடங்களில் போட்டியிட விரும்புவோருக்கான வேட்புமனு தாக்கல், கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்று நிறைவடைகிறது. 34 எம்எல்ஏக்கள் வாக்களித்தால் ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க முடியும். இந்த சூழலில், திமுக சார்பாக 4 பேரும், அதிமுக சார்பாக 2 பேரும் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த பேச்சுவார்த்தையின்போது, சில கட்சிகள் மாநிலங்களவை இடத்தையும் கேட்டிருந்ததால் எம்.பி வேட்பாளர்களை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் அறிவிப்பு – யார் இந்த கிறிஸ்டோபர் திலக்?
இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதி நாள் என்பதால் திமுக, அதிமுக கட்சிகள் தங்களது கட்சி வேட்பாளர்களை நேற்று அறிவித்தன.
அதாவது, திமுகவிடம் உள்ள 4 மாநிலங்களவை இடங்களில் திமுக துணை பொதுச் செயலாளர் திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், திமுக செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 தொகுதிகளில் ஒன்று தேமுதிகவிற்கும், ஒன்று காங்கிரஸுக்கும் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதேபோல அதிமுகவில் உள்ள 2 மாநிலங்களவை இடங்களில் ஒன்றில் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரைக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்றொரு இடத்தை பாமக அன்புமணி தரப்பிற்கு அதிமுக ஒதுக்கியுள்ள நிலையில், அந்த இடத்தில் அன்புமணி ராமதாஸ் வேட்பாளராக களம் காண்கிறார். திமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் எல்.கே சுதீஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இன்று கடைசி நாள் என்பதால் திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, பாமக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர். இவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளனர்.

