வீராம்பட்டினம் பகுதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சுற்றுலா வந்திருந்த பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
பெங்களூரு ஏசி கோஸ்ட் பகுதியைச் சேர்ந்த விஜய், தனது மனைவி சோனியா, 3 குழந்தைகள் மற்றும் உறவினர்கள் என மொத்தம் 8 பேர் புதன்கிழமை (பிப். 18) புதுச்சேரிக்குச் சுற்றுலா வந்து வீராம்பட்டினத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்தனர்.
இந்நிலையில் நேற்று (பிப்.19) மதியம் வீராம்பட்டினத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவருக்குச் சொந்தமான படகில் விஜய் குடும்பத்தினர் 8 பேரும் கடலில் சவாரி சென்றுள்ளனர். அவர்கள் சின்ன வீராம்பட்டினம் அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக எழுந்த ராட்சத அலையில் சிக்கிப் படகு நிலைகுலைந்து கவிழ்ந்தது. அலையில் சிக்கி படகு கவிழ்வதைக் கண்ட அங்கிருந்த மீனவர்கள், உடனடியாகத் தங்களது மீன்பிடி படகுகள் மூலம் விரைந்து சென்று கடலில் விழுந்து தத்தளித்தவர்களை மீட்டுக் கரைக்குக் கொண்டு வந்தனர்.
உரிய உரிமம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களின்றி சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் படகுகளால் இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் இதுகுறித்து சுற்றுலாத் துறையிடம் பலமுறை முறையிட்டும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்திற்கு காரணமான, விதிமுறைகளை மீறிப் படகை இயக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு குறித்த கேள்விகள் மீண்டும் எழுந்துள்ள நிலையில், இந்த விபத்து புதுச்சேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

