நான் வாசிக்காமல் போயிருந்தால் என்னுடைய ஊர், எழுத்து, சினிமாவைத் தாண்டி வேறு ஒரு உலகம் இருப்பது தெரியாமல் இருந்திருப்பேன் என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒன்பதாவது பொருநை புத்தகத் திருவிழா கடந்த பத்தாம் தேதி தொடங்கி மாநகராட்சி எதிரேயுள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்று வருகிறது. இந்த புத்தக கண்காட்சியில் 115க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்கள் பங்கேற்று 126 அரங்குகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை காட்சிப்படுத்தியுள்ளன.
இந்த நிலையில் நேற்றிரவு நடைபெற்ற ஆறாம் நாள் நிகழ்ச்சியில் கவியரங்கம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இந்நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், “எனக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றிக்கு முக்கிய காரணம், என்னை ஒருவர் தொடர்ந்து வாசிக்க சொன்னதுதான். நான் வாசிக்காமல் போயிருந்தால் என் ஊர், என் எழுத்து, என் சினிமாவையும் தாண்டி ஒரு உலகம் இருப்பது எனக்கு தெரிந்திருக்காது.
ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகளுக்குக்கூட போக முடியும் என்ற நம்பிக்கையை எனக்கு வாசிப்புதான் கொடுத்தது. நான் வாசித்த பிறகுதான் எனக்கு தஸ்தாயெவ்ஸ்கி அறிமுகமானார். வாசிப்பினால்தான் உலகத்திலுள்ள அத்தனை எழுத்தாளர்களும் எனக்குத் தெரிய வந்தார்கள்.
நாம் கடந்து வந்த பாதைகளை புரிந்துகொள்ளத்தான் பழைய விஷயங்களை பேசுகிறோம். நம்மை நாம் புரிந்துகொள்ளாமல் அடுத்தவருடன் உரையாட முடியாது. பழைய மாரி செல்வராஜ் என்பவன் ஒரு வேர். அந்த வேருக்குள் வலி, வேதனை, ஆக்ரோஷம் எல்லாம் இருக்கிறது. ஆனால், அந்த வேர் இன்று ஒரு மரமாக மாறி நிழல் கொடுக்கிறது என்றால், அந்த நிழலுக்கும் வேருக்கும் இடையில் இருப்பது ‘வாசிப்பு’ மட்டுமே.
இதையும் படிங்க: வாரத்தின் முதல் நாளிலேயே குறைந்த தங்கம் விலை – சவரன் ரூ. 1,15,520-க்கு விற்பனை
வாசிப்பு என்பது ஃபேன்டசி அல்ல; அது நமக்கான நிழலை நாமே உருவாக்கிக்கொள்ளும் வழி. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் உரையாடி, புத்தகங்களை வாசிக்க சொல்லவேண்டும். வாசிப்பு குழந்தைகளின் உலகத்தைப் பெரிதாக்கும்” என்றார்.
அதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், “நெல்லையில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமல்லாமல், மாதந்தோறும் இதுபோன்ற புத்தக கண்காட்சிகள் நடத்தப்பட வேண்டும் என்பது என் ஆசை. நெல்லை மண்ணிற்கும் வாசிப்பிற்கும் எப்போதுமே ஒரு நெருக்கமான தொடர்பு உண்டு.
வாசிப்பு மட்டுமே ஒரு விஷயத்தில் இருக்கும் பல்வேறு அடுக்குகளையும், வெவ்வேறு பார்வைகளையும் புரிய வைக்கும். மனிதர்களுடன் எப்படிப் பழக வேண்டும், அவர்களுடைய கோபம் மற்றும் வலியின் பின்னணியை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கு வாசிப்பு ஒரு சிறந்த வழிகாட்டியாக அமைகிறது” என்றார்.

