உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் உற்சாகமுடன் கொண்டாடப்படும் வேளையில், காதலர்களை குஷிப்படுத்த நெல்லையில் டீக்கடைக்காரர் ஒரு ரூபாய்க்கு டீ விற்பனை செய்து வருகிறார்.
காதலர் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக நகரப் பகுதிகளில் காதலர்கள் பூங்காக்கள், சுற்றுலா தளங்கள், கோயில்கள் என பல்வேறு இடங்களுக்கு ஜோடியாக சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காதலர்களை மகிழ்விக்கும் வகையில் கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பே காதலர் தின பரிசுப் பொருட்கள் கடைகளில் விற்பனைக்கு குவிந்தது.
குறிப்பாக இதய வடிவிலான பரிசுப் பொருட்கள், ரோஜாப் பூக்கள் மனதை கொள்ளை கொள்ளும் வகையிலான வண்ண வண்ண காதல் பொம்மைகள் என காதலர் தின விற்பனை படுஜோராக நடைபெற்று வந்தது. தங்கள் காதல் ஜோடிகளுக்கு பரிசுகளை வழங்கி இன்று காதலர் தினத்தை பலரும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் டீக்கடைக்காரர் ஒருவர், காதலர் தினத்தை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு சலுகை விலையில் ஒரு ரூபாய்க்கு டீ விற்பனை செய்து வரும் சம்பவம் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.
அதாவது, வள்ளியூரில் ஜெயக்குமார் என்பவர் நடத்தி வரும் டீக்கடை முன்பு வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனரில், காதலர் தினத்தை முன்னிட்டு இந்த பிப்ரவரி மாதம் 13,14,15 ஆகிய தினங்கள் ஒரு டீ, ஒரு ரூபாய்க்கு விற்பனை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் ஆர்வமுடன் இந்த டீ கடைக்கு சென்று, டீ குடித்து வருகின்றனர்.

