அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தையை 7 மணிநேரத்திற்குள் திருச்சி போலீசார் மீட்டுள்ளனர். மேலும், கடத்திச் சென்ற பெண்ணையும் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், துறையூரை சேர்ந்த விக்னேஷ் என்பவரது மனைவி சுகன்யா. கர்ப்பிணியான சுகன்யா, கடந்த 11-ம் தேதி பிரசவத்திற்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினமே அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அவருக்கு துணையாக அவரது உறவினர் பிரேமா இருந்துள்ளார். இதனிடையே, அதே பிரிவில், சிகிச்சைக்காக வந்த பெண் ஒருவர் சுகன்யாவுக்கு அறிமுகமாகி உள்ளார். தன் பெயர் மீனாட்சி என கூறி சுகன்யாவிடம் பேசி வந்துள்ளார். அவ்வப்போது சுகன்யாவிற்கு அந்த பெண் உதவியும் செய்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை குழந்தைக்கு தடுப்பூசி போட செல்வதாக அந்த பெண்ணிடம் சுகன்யா கூறியுள்ளார். அப்போது அந்த பெண், நானே சென்று குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தி விட்டு வருகிறேன் என குழந்தையை வாங்கிச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அந்த பெண் திரும்பி வராததால் சந்தேகமடைந்த சுகன்யா, மருத்துவமனை முழுவதும் தேடியுள்ளார். ஆனால், அந்த பெண்ணையும், குழந்தையையும் காணவில்லை. இதுகுறித்த தகவலின் பேரில், சுகன்யாவின் பெற்றோர் வந்தும் குழந்தையை நீண்டநேரமாக தேடினர்.ஆனாலும் குழந்தை மருத்துவமனையில் வளாகத்தில் எங்கும் இல்லை.
இதனைத் தொடர்ந்து, குழந்தை காணாமல் போனதாக அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்தனர். இதன்பேரில், மருத்துமனைக்கு வந்த போலீசார், சுகன்யாவின் உறவினர்களுடன் இணைந்து மருத்துவமனை முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராக்களில் குழந்தை கடத்தப்பட்ட காட்சி பதிவாகியுள்ளதா? எனவும் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மருத்துவமனை வளாகத்தில் இருந்த கேமராவில் பெண் ஒருவர் குழந்தையை தூக்கிக் கொண்டு ஆட்டோவில் ஏறி சென்றது தெரியவந்தது. இந்த சிசிடிவி காட்சி மற்றும் அந்த குறிப்பிட்ட பெண்ணின் செல்போன் டவர் அடையாளத்தை வைத்து கடத்தலில் ஈடுபட்டவரை துறையூர் அருகே சுற்றி வளைத்து போலீசார் கைது செய்து, குழந்தையை மீட்டனர். 8 மணிநேரத்திற்குள்ளாக போலீசார் குழந்தையை மீட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடத்தல் ஈடுபட்ட பெண், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி சேர்ந்த மீனாட்சி என்பது தெரியவந்தது. நீண்ட நாட்களாக குழந்தை இல்லாத விரக்தியில், குழந்தையை கடத்தியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். மீட்கப்பட்ட குழந்தை நலமுடன் உள்ளதாகவும், விரைவில் திருச்சி மருத்துவமனையில் உள்ள குழந்தையின் தாயிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை 7 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

