நானும், அண்ணாமலையும் அண்ணன் தம்பி, எங்களுக்குள் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
கோயம்புத்தூர் வடவள்ளி பகுதியில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் ‘மோடி முகாம்’ நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்தித்தார்.
அப்போது அண்ணாமலைக்கும், உங்களுக்கும் இடையே பிரச்சனை உள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வலம் வருகிறதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளன. செய்தியாளர்களை திமுகவினர் தாக்குகின்றனர். ஆனால், பாதிக்கப்பட்ட செய்தியாளர் மீதே இந்த அரசு வழக்குப் பதிவு செய்கிறது. இதையெல்லாம் விட்டுவிட்டு, சிறிய விஷயங்களை ஊடகங்கள் ஊதி பெரிதாக்குகின்றன. நானும், அண்ணாமலையும் அண்ணன் தம்பிகளாக இருக்கிறோம். எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. நீங்கள் நினைப்பது போன்று ஒன்றும் நடக்காது” என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “முதலமைச்சருக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இதற்கு உதாரணம் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்டோர் தமிழக அரசிற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். தேர்தல் வாக்குறுதிகளை 5 ஆண்டுகளாக முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. திமுக அரசு 470 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சொத்து வரி, மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில், மக்களின் எதிர்ப்பு மனநிலை மு.க.ஸ்டாலினுக்கு தெரியவில்லை.
கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி என திமுக குடும்ப ஆட்சி செய்கிறது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அடுத்த தேர்தலில் முதலமைச்சராக்குவதையே ஸ்டாலின் நோக்கமாக கொண்டுள்ளார். அதைத் தவிர தமிழ்நாடு மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணம் அவரிடம் இல்லை” என விமர்சித்தார்.
கூட்டணி குறித்த கேள்விக்கு, “கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள். இன்னும் நிறைய பேர் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வருவார்கள். அது யார், யார் என்பது மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்து சென்ற பின்பு தெரியும். தமிழ்நாடு, கேரளா போன்ற நான்கைந்து மாநிலங்களை தவிர, இந்தியாவில் உள்ள எல்லா மாநிலத்திலும் பாஜக ஆட்சி தான் இருக்கிறது. அதில் எதாவது சந்தேகம் இருக்கிறதா?
மேலும், எடப்பாடி பழனிசாமி அவரது ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரிகள் என பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். எடப்பாடி பழனிசாமி அருமையான ஆட்சி தந்தார். அதனால் தான் அவர் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமென பாஜக விரும்புகிறது. தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கிறது. அதற்கு முன்னதாக, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஆரம்பித்து விடும். தொகுதி பங்கீட்டை முடிக்க எங்களுக்கு 2 மணி நேரம் போதும்” என்றார்.
தவெக தே.ஜ கூட்டணிக்கு வர வேண்டும் என தமிழிசை செளந்தரராஜன் பேசிய கருத்துக்கு பதிலளித்த அவர், “திமுக ஆட்சி இருக்கக் கூடாது என்பது தான் எங்கள் நோக்கம். ஆனால், தவெக தலைவர் விஜய் எங்களுக்கு எதிரான மனநிலையில் தான் பேசி வருகிறார். இருந்தாலும், தமிழிசை செளந்தரராஜனின் கருத்து சரியானது. எல்லோரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தமிழிசை சொல்வதில் தவறில்லை” எனத் தெரிவித்தார்.

