தமிழ்நாட்டில் உள்ள சாலைகள், தெருக்களில் சாதி பெயர்களை நீக்கும் தமிழக அரசின் அறிவிப்புக்கு தடை கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரையை சேர்ந்த பரமசிவம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். பரமசிவம் தாக்கல் செய்த அந்த மனுவில், ”தமிழ்நாட்டில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளுக்கு வைக்கப்பட்டுள்ள சாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதாவது ஆதி திராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம் போன்ற சாதிப் பெயர்களை நீக்குதல், புதிய பெயரிடும் பணிகளை நவம்பர் 19 ஆம் தேதிக்குள் முடிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறையில் பல பிரச்சனைகள் உள்ளது. எனவே இந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்” என மனுவில் பரமசிவம் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”இந்த அரசாணையில் இருப்பது போல் 45 நாட்களுக்குள் தமிழகம் முழுவதும் உள்ள தெருக்கள், ஊர் பெயர்கள் இடங்களில் பெயரை மாற்றுவது நடைமுறைக்கு சாத்தியமற்றது. மக்கள் கருத்து கேட்பதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் உள்ளது. எனவே உரிய தெளிவு இல்லாமல் கால அவகாசம் இல்லாமல் உள்ள இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’ என கூறினார்.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”குறிப்பிட்ட காலத்திற்குள் ஒவ்வொரு பணிகளும் முடிக்க வேண்டும் என்பதுதான் வழிகாட்டு நெறிமுறைகளே ஆகும். அலகாபாத், பிரயாக்ராஜ் என மாற்றப்பட்டுள்ளது. எனவே இந்த அரசாணையை செயல்படுத்த அனுமதிக்க வேண்டும்” என வாதிட்டார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள், ”அரசின் கொள்கை முடிவில், நீதிமன்றம் தலையிட முடியாது. ஆனால் இந்த அரசாணையில் குறைபாடுகள் உள்ளது. நடைமுறை படுத்துவதில் பல சில கேள்விகள் எழுகிறது. அதை எவ்வாறு சரி செய்வீர்கள்? பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும், சாதி பெயர்களை நீக்குவது குறித்து கடந்த 1978 ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

