தமிழக அமைச்சர் மூர்த்தி சாதிய வன்மத்துடன் பேசுவதாக மதுரை சின்ன உடைப்பு கிராம மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் தங்களுக்கு உரிய மறுவாழ்வு மற்றும் இழப்பீடு வழங்கக் கோரி சின்ன உடைப்பு கிராம மக்கள் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். மேலும், சின்ன உடைப்பு கிராமத்தில் உள்ள வீடுகளைக் காலி செய்ய அதிகாரிகள் முற்பட்ட போது, கடந்த சில வாரங்களாகவே அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தற்போது வரை 65 பேருக்கு மட்டுமே இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டதை ஏற்காமல் மொத்தம் உள்ள 250 குடும்பங்களுக்கும் வழங்கக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களுக்கு மாற்று இடம் மற்றும் கூடுதல் இழப்பீடு வழங்காமல் வெளியேற மாட்டோம் என உறுதியாகக் கூறி வரும் நிலையில் எம்.பி கனிமொழியிடம் முறையிடச் சென்றனர்.
அப்போது அங்கிருந்த அமைச்சர் மூர்த்தி “இந்த கிராமத்தையே நான் தான் காப்பாற்றினேன்” என்று கூறியதாகவும், தங்களை மிகவும் ஒருமையில் பேசி, சாதிரீதியில் வன்மத்தை வெளிப்படுத்தியதாகவும் அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
எனவே, அமைச்சரை கண்டித்து இன்று சின்ன உடைப்பு கிராமத்தில் திரண்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அமைச்சரின் செயல்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், அமைச்சர் மூர்த்தியின் உருவப் பொம்மையை எரிக்க முயற்சித்தனர்.
அப்போது காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு பெரும் ஏற்பட்டது. தற்போது அந்தப் பகுதியில் பதற்றம் நிலவி வருவதால், கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் மூர்த்திக்கு எதிரான போராட்டம், உருவ பொம்மையை எரிக்க முயன்ற சம்பவம் மதுரையில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றி போராட்டக் குழுவில் உள்ள தேவேந்திர குல மகாசபை தலைவர் ஜெயக்குமார் கூறுகையில், ”எங்கள் சின்ன உடைப்பு கிராமத்தில் மக்கள் தங்களின் உரிமைக்காக வாழ்வாதாரத்திற்காகவும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிக்கு எடுக்கப்பட்ட நிலங்களுக்கு ஈடு செய்யும் வகையில் 65 குடும்பத்திற்கு மட்டும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து 250 பேருக்கும் இடம் வழங்க கோரி போராடி வருகிறோம். இந்த நிலையில் அமைச்சர் மூர்த்தி விரும்பத்தகாத வகையில் சாதிய வன்முத்துடன் பேசியது கண்டிக்கத்தக்கது. முதலமைச்சர் மற்றும் துணை முதல்வர் தலையிட்டு உடனடியாக அமைச்சர் மூர்த்திக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

