சென்னை விமான நிலையத்தை சுற்றி ஒரு விமானம் நீண்ட நேரம் தொடர்ந்து வானில் வட்டமடித்து கொண்டே இருந்ததால் அந்த பகுதியை சுற்றியுள்ள பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை விமான நிலைய பகுதியில் நேற்று ( பிப். 11) மதியம் பெரிய ரக விமானம் ஒன்று தொடர்ந்து வானில் வட்டமடித்து பறந்துகொண்டு இருந்தது. மேலும் அந்த விமானமானது தாழ்வாக பறப்பதும், அதனைத் தொடர்ந்து மேலே எழும்பி சென்றவாறும் பறந்துகொண்டே இருந்துள்ளது. இதனை கவனித்த அங்குள்ள பொதுமக்களும், விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கிற குடியிருப்பு வாசிகளும் பதற்றம் அடைந்தனர்.
மேலும் சென்னை விமான நிலையத்தை ஒட்டியுள்ள சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளும் விமானம் தாழ்வாக பறப்பதையும், பிறகு மேலே எழும்பி பறப்பதையும் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தனர். இருப்பினும் அந்த பகுதியை சுற்றி சுற்றியே வட்டமடித்துக் கொண்டிருந்தது. இதனால் விமானத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டுள்ளதா என பொதுமக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டது.
அதன்பின்னர் குறிப்பிட்ட நேரம் கழித்து விமானம் அங்கிருந்து சென்றபிறகு விமான நிலைய பகுதியில் ஏற்பட்ட பரபரப்பு நீங்கி இயல்பு நிலைக்கு திரும்பியது.
இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் விளக்கமளித்தனர்.
விமான நிலையம் அருகே வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தது தனியார் பயிற்சி விமானம் என்றும், அவர்கள் இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு துறை டிஜிசிஏ ஆகியவற்றிடம் முன்னதாகவே முறைப்படி அனுமதி பெற்று பயிற்சி மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோல சென்னை விமான நிலையத்தில் பெரிய ரக போயிங் விமானங்கள் தரையிறங்குவது குறித்து பயிற்சி விமானிகளுக்கு அவ்வபோது பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

