ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கணவரை காப்பாற்ற முயன்றபோது, மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் அய்யனார் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சிவகண்டன் (40) கலையரசி (35) தம்பதி. தற்போது, மும்பை மாலட் மேற்கு, வைனை காலனி பகுதியில் வசித்து வரும் இவர்கள், அங்கே உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், சிவகண்டனின் பாட்டியின் காரிய சடங்கில் பங்கேற்பதற்காக திருவண்ணாமலை கிளம்பியுள்ளனர். அந்த வகையில் மும்பையிலிருந்து புதுச்சேரி நோக்கி வந்த தாதர் விரைவு ரயிலில் அவர்கள் பயணித்தனர்.
இந்நிலையில், அதிகாலை சுமார் 4 மணியளவில் ரயில் ஆரணி சாலை – போளூர் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது, பொதுப் பெட்டியின் முன்பக்க படிக்கட்டு அருகே நின்று பயணம் செய்த சிவகண்டன், திடீரென நிலைதடுமாறி ஓவும் ரயிலில் இருந்து கீழே விழுந்துள்ளார். அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கலையரசி, கணவரைக் காப்பாற்ற முயன்றுள்ளார்.
ஆனால், துரதிஷ்டவசமாக இருவரும் ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்துள்ளனர். எதிர்பாராத இந்த விபத்தில், பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதனைப் பார்த்து பதறிய சக பயணிகள், உடனடியாக அபாய சங்கிலியை இழுத்து, ரயிலை நிறுத்தினர்.
இதையும் படிங்க: முட்டையை நன்றாக சமைத்து சாப்பிட்டால் பிரச்சனை இல்லை – கோழிப்பண்ணை உரிமையாளர்கள்
தொடர்ந்து, ரயில் காவலர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆரணி சாலை ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் காட்பாடி ரயில்வே போலீசார், உயிரிழந்த தம்பதியினரின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, உயிரிழந்த தம்பதியினரின் உடைமைகள் ரயிலிலேயே இருந்ததால், சக பயணிகள் அதிலிருந்த செல்போன் மூலம் அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காட்பாடி ரயில்வே போலீசார், இது தற்செயலாக நடந்த விபத்தா? அல்லது தற்கொலையா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ரயிலின் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்யாமல், பாதுகாப்பாக பயணிக்குமாறும் ரயில்வே துறை பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தற்போது, பாட்டியின் காரிய சடங்கில் பங்கேற்க சொந்த ஊருக்கு திரும்பிய தம்பதியினர், ஓடும் ரயிலிலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

