தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் காரை பின்தொடர்ந்து சென்ற 2 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று இரவு திருவான்மியூரில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்னர், நிகழ்ச்சி முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்டு ஆளுநர் மாளிகை நோக்கி வந்து கொண்டிருந்ததார்.
அவரது பாதுகாப்புக்காக வழக்கம் போல போலீசாரின் வாகனங்கள், ஆளுநரின் காருக்கு முன்னும் பின்னும் வந்து கொண்டிருந்தன. இதனை ஆங்கிலத்தில் ‘கான்வாய்’ (Convoy) என அழைப்பர்.
இந்நிலையில், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை அருகே ஆளுநரின் கான்வாய் சென்ற போது, திடீரென இரண்டு இளைஞர்களுடன் இருசக்கர ஒன்று, போலீஸ் பாதுகாப்பை மீறி ஆளுநர் கான்வாயில் புகுந்தது.
இதனை பார்த்து திடுக்கிட்ட போலீசார், அவர்களின் வாகனத்தை மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால், அந்த இளைஞர்கள் வேகமாக அங்குமிங்குமாக சென்று, சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வரை ஆளுநர் காரை பின்தொடர்ந்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, ஆளுநர் கான்வாய் ஒரு வழியாக ராஜ் பவனுக்குள் சென்றது. அப்போது ராஜ் பவன் அருகே தயாராக இருந்த போலீசார், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை மடக்கி பிடித்தனர். அப்போது அவர்கள் மது போதையில் இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து, அவர்களை கிண்டி காவல் நிலையத்தில் போலீசார் ஒப்படைத்தனர். அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஜீவா (22), கள்ளக்குறிச்சியை சேர்ந்த அன்புராஜ் (23) என்பதும், இருவரும் பெருங்குடி பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் ஹவுஸ் கீப்பிங் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.
நேற்று இரவு இருவரும் மது அருந்தி விட்டு இருச்சக்கர வாகனத்தில் வரும் போது, அடையாறு புற்று நோய் மருத்துவமனை அருகே போக்குவரத்து போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தததால், தாங்கள் மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சத்தில், ஆளுநர் கான்வாய்க்குள் நுழைந்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.
இதையடுத்து, இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

