வேல்ஸ் ஃபிலிம் சினிமா தயாரிப்பு நிறுவனத்திடம் 21.75 கோடி மோசடி செய்த வழக்கில் இருவரை கைது செய்த தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் மேலாளர் குணசேகரன் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகாரில், ஈ.வி.பி. குழுமத்தைச் சேர்ந்த சந்தோஷ் ரெட்டி மற்றும் அவரது மேலாளர்கள், செம்மங்கலம் என்ற கிராமத்தில் தங்களுக்கு சொந்தமாக 34 ஏக்கர் நிலம் மற்றும் சினிமா தியேட்டர் வளாகம் உள்ளதாக கூறி, அந்த சொத்துக்களை நிர்வகிப்பதற்கு ஒப்பந்தங்கள் போட்டுக்கொள்ள எங்கள் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் அங்கிருக்கும் அனைத்து கட்டடங்களும், சட்டபூர்வமாக அனைத்து அனுமதிகளும் பெற்று கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. அதற்கான அனைத்து ஆவணங்களையும் தாங்கள் வைத்துள்ளதாக உறுதியளித்தனர். இதனை நம்பி வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் முதல் தவணையாக 15 கோடி ரூபாய் ஈ.வி.பி. குழுமத்தின் சந்தோஷ் ரெட்டியிடம் வழங்கியது.
இதையடுத்து அந்த சொத்தின் மீது எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் மூலம் கடன் செய்துக் கொண்டுள்ளதாகவும், அதை முடிப்பதற்காக சந்தோஷ் ரெட்டி மேலும் 6 கோடி ரூபாய் வாங்கினார். இதையடுத்து அந்த இடத்தில் வேல்ஸ் நிறுவனத்தின் பேரில் பொழுதுபோக்கு வளாகம் மற்றும் தியேட்டர்கள் கட்டுவதற்காக கடந்த ஆண்டு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.
இதையடுத்து சுமார் 21.75 கோடி ரூபாய் பணத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து பெற்றுக் கொண்டனர். ஆனால், அங்கு பணிகளை தொடங்குவதற்கு எந்த ஒரு ஆவணங்களையும் தராமல் காலம் தாழ்த்தி தங்களுக்கு தெரியாமல் ஒப்பந்தத்தை ரத்து செய்து சந்தோஷ் ரெட்டி மோசடி செய்து உள்ளார்.
மேலும் அவர்கள் எங்களிடம் ஏற்கனவே ஒப்படைத்த சில ஆவணங்களை ஆய்வு செய்தபோது, அங்கு இருக்கும் கட்டடங்களுக்கு உரிய நிறைவுச் சான்றிதழ்கள் எதுவும் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இதனால் தங்களிடம் ஒப்பந்தத்திற்கு முன்பு வாங்கப்பட்ட பணத்தை திருப்பி வழங்க கேட்ட போது, அதை தராமல் தங்களை அங்கிருந்து வெளியேறும்படி சந்தோஷ் ரெட்டி மற்றும் அவரது மேலாளர்கள் வினோத்குமார், கிரண்ராஜ் ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்கள் பணத்தை மீட்டுக் கொடுக்கும்படி அந்த புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
புகாரின் பேரில், இந்த வழக்கை விரைந்து விசாரணை செய்து சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 318(4), 351(2), 324(5), 336(2), 336(3), r/w 111 BNS ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணையை மேற்கொண்டனர்.
மேலும், தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஈ.வி.பி குடும்பத்தைச் சார்ந்த சந்தோஷ் ரெட்டி மற்றும் அவரது மேலாளர்கள் வினோத் குமார், கிரண்ராஜ் என மூவரையும் தேடி வந்த நிலையில் அவர்கள் தலைமறைவாகினர். இதையடுத்து தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து மூவரையும் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்தநிலையில் இன்று சென்னையில் பதுங்கியிருந்த சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த ஈ.வி.பி குழுமத்தைச் சேர்ந்த சந்தோஷ் ரெட்டி (45), அவரது மேலாளர் சென்னை ஏகாட்டூர் பகுதியைச் சேர்ந்த வினோத் (52) ஆகிய இருவரையும் தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சந்தோஷ் ரெட்டி மற்றும் அவரது மேலாளர் வினோத் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதையடுத்த இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். அப்போது இருவரையும் பிப்ரவரி 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் அவர்கள் இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய சந்தோஷ் ரெட்டியின் மற்றோரு மேலாளர் கிரண்ராஜ் என்பவரையும் தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

