குடியாத்தம் அருகே விசாரணைக்கு சென்ற போலீசார் தாக்கப்பட்ட சம்பவத்தில் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த முனாப் டிப்போ பகுதியை சேர்ந்தவர் அக்பர் பாஷா (29). இவர் சில தினங்களுக்கு முன்பு குடியாத்தம் அடுத்த சித்தூர்கேட் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு பொருட்களை வாங்க சென்றுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் (21) என்பவர் அந்த கடைக்காரருடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அப்போது அக்பர் பாஷா, தனது செல்போனை எடுத்து பேசியதாக தெரிகிறது. இதனை பார்த்த இஸ்மாயில், “இங்கே நடக்கும் தகராறை பற்றி யாரிடம் போன் செய்து கூறுகிறாய்?” என கேட்டுள்ளார். அதற்கு அக்பர் பாஷா, இந்த விஷயத்தை பற்றி பேசவில்லை என்றும், என்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்பது பற்றி வீட்டிற்கு போன் செய்து பேசிக் கொண்டிருந்ததாகவும் கூறினார்.
ஆனால் அதனை நம்பாத இஸ்மாயிலின் நண்பர்கள், அக்பர் பாஷாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அக்பர் பாஷா, குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து, நேற்று (பிப்.8) இரவு இஸ்மாயில் மற்றும் அவரது கூட்டாளிகள் அக்பர்பாஷா வசிக்கும் முனாப் டிப்போ பகுதிக்கு சென்று, அவரது நண்பரான அர்ஷத் (29) என்பவரையும் இரும்பு கம்பி மற்றும் கட்டையால் தாக்கியதாக தெரிகிறது. இதில் பலத்தை காயமடைந்த அர்ஷத்தை மீட்ட அப்பகுதியினர், குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் காவல் நிலையத்திலும் அவர்கள் புகார் அளித்தனர்.
இதனிடையே, தாக்குதலில் ஈடுபட்ட இஸ்மாயில் உள்ளிட்டோர் காதர்பேட்டை பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன், ஏட்டு கேசவன் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, போலீசாருடன் இஸ்மாயில் மற்றும் அவரது கூட்டாளிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், போலீசாரை அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதன்பேரில், அவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், இஸ்மாயில் (21), சலீம் (22), ஆஜாம் (27), உசேன் (21), மெகபூப்பாஷா (21) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

