இந்தியாவிலேயே கர்நாடகா மாநிலம் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோயிலுக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலில் தான் தசரா திருவிழா வெகு சிறப்பாகவும், பிரமாண்டமாகவும் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, அதிகாலை 5 மணிளவில் யானை மீது வைத்து கொடி பட்டம் ஊர்வலம் நடைபெற்றது.
பின்னர் காலை 6 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்துக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகமும், சிறப்பு தீபாரதனையும் நடைபெற்றது.
இதையடுத்து மாலை அணிந்து விரதம் இருந்த பக்தர்கள் கோயில் பூசாரியிடம் திருக்காப்பு கட்டினர். தொடர்ந்து பக்தர்கள் தாங்கள் நேர்த்தி கடன் பட்ட வேடங்கள் அணிந்து காணிக்கை வசூலிக்க தொடங்கினர். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு சிவலூர் தசரா குழு சார்பில் அன்னதானம் நடைபெற்றது. செப்டம்பர் 24-ம் தேதி முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை தினசரி காலை 7.30 மணி, 9 மணி, 10.30 மணி, பகல் 12 மணி, 1.30 மணி, மாலை 4.30 மணி, 6 மணி, இரவு 7.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 12 மணிக்கு அன்னதானமும் நடைபெறும்.
கொடியேற்றத்தை முன்னிட்டு குலசேகரன்பட்டினம், உடன்குடி, திருச்செந்தூர் பகுதியில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.
தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து குலசேகரன்பட்டினத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

