நான் தான் ரௌடி, நான் தான் ரௌடி என வடிவேலு போன்று கூறி வருவதாக விஜய்யை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் விமர்சனம் செய்தார்.
சாத்தூர் தொகுதியின் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக மீண்டும் வர வேண்டும் என்று சாமி தரிசனம் மேற்கொள்ள வந்தேன். அதிகாலை 3 மணியளவில் சூரசம்ஹார மூர்த்திக்கு 11 அபிஷேகம் செய்து இந்த 2026-ல் எடப்பாடி முதலமைச்சராக அரியணை ஏற வேண்டும் தரிசனம் செய்துள்ளேன்.
எடப்பாடி பழனிசாமி மாபெரும் கூட்டணி அமைத்து விட்டார். அவர் அமைத்துள்ள வலுவான கூட்டணியால் வரும் சட்டமன்ற தேர்தலில் 210 தொகுதிகள் வெற்றி பெறுவோம்” என்றார்.
மேலும் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக – தவெக இடையே தான் போட்டி என தவெக தலைவர் விஜய் கூறி வருவது குறித்த கேள்விக்கு, ”நான் தான் ரௌடி, நான் தான் ரௌடி என்று நடிகர் வடிவேலு போன்று கூறி வருகிறார். அதிமுக 54 ஆண்டு காலம் பாரம்பரியம் மிக்க கட்சி. அதிமுக கோடிக்கணக்கான மக்களின் விருப்பத்தை பெற்ற மாபெரும் இயக்கம். இரண்டரை கோடி தொண்டர்களை கட்டமைத்து எதிரிகளை, துரோகிகளை வீழ்த்திய இயக்கம். ஆகவே, வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்.
அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை பயன்படுத்தும் தகுதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும் தான் உள்ளது” என்றார்.
சாத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்த ராஜவர்மன், டிடிவி தினகரன் அணிக்குச் சென்றதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர். இவர் டிடிவி தினகரன் கட்சி ஆரம்பித்த போது அதில் முக்கிய நிர்வாகிகள் ஒருவராக இருந்தார். பின்னர், அமமுகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
இதனிடையே முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திருச்செந்தூருக்கு சாமி தரிசனம் மேற்கொள்ள வந்த நிலையில், முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மனும் தரிசனத்திற்கு வந்துள்ளார். இதனால் சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்க வந்தாரா? என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது.

