நாய்க்கடியை அலட்சியப்படுத்தி சிகிச்சை பெறாமல் இருந்த இளைஞர் ஒருவர், நாயை போலவே குரைத்தும், தட்டில் நீர் அருந்தியபடியும் இருந்து உயிரிழந்த சம்பவம் திருவாரூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட முடிகொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயக்குமார் -அமுதா தம்பதியினர். இவர்களுக்கு சிவக்குமார், கனகராஜ், அருண் குமார், ஆனந்த்பாபு, ஆகாஷ் ஆகிய 5 மகன்களும் அனுசுயா என்கிற ஒரு மகளும் உள்ளனர்.
இவர்களில் ஆகாஷ் (22) கூலி வேலை செய்து வந்துள்ளார். இதனிடையே, மூன்று மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள தெரு நாய் ஒன்று ஆகாஷ் காலில் கடித்துள்ளது. இதையடுத்து, அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் டி.டி. ஊசி மட்டும் போட்டுவிட்டு ஆகாஷ் வீட்டிற்கு வந்துள்ளார்.
ஆனால், நாய் தன்னை கடித்ததை வீட்டில் சொல்லாத ஆகாஷ், ரேபிஸ் ஊசியும் போடாமல் அலட்சியமாக இருந்துள்ளார். மூன்று மாதங்கள் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் ஆகாஷ் சகஜமாக இருந்திருக்கிறார்.
இந்த சூழலில், கடந்த இரண்டு நாட்களாக ஆகாஷ் தட்டில் தண்ணீர் அருந்துவதும், வீட்டில் ஒரு மூலையில் சுருண்டு படுத்துக் கொள்வதுமாக இருந்துள்ளார். மேலும், அவருக்கு காய்ச்சலும் ஏற்பட்டுள்ளது.
ஆகாஷின் செயல்பாடுகளில் மாற்றத்தை கண்ட அவர்களின் பெற்றோர், அவரை உடனடியாக அருகில் உள்ள திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்த போது, அவருக்கு ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும், ஆகாஷ் உயிரிழந்தார். பின்னர், ஆகாஷின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் சுகாதாரத்துறை சார்பில் தென்குடி அருகே உள்ள சுடுகாட்டில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி அடக்கம் செய்யப்பட்டது.
அப்போது அவரது பெற்றோர்கள் , உறவினர்கள், ஊர் மக்கள் என அனைவரும் சுடுகாட்டிற்கு வந்து கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி, காண்போரின் மனதை உலுக்குவதாக இருந்தது.
ரேபிஸ் வைரஸ் குறித்து பல ஆண்டுகளாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்த போதிலும், இன்னமும் நாய்க்கடியை அலட்சியப்படுத்தி மரணிக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. நாய், பூனை, கீரிப்பிள்ளை, வவ்வால் உள்ளிட்ட விலங்குகள் கடித்தால், உடனடியாக காயம் ஏற்பட்ட இடத்தை 15 நிமிடங்கள் சோப்பு போட்டு கழுவி, பின்னர் ரேபிஸ் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும். இல்லையெனில், ரேபிஸ் வைரஸ் உடலுக்குள் புகுந்து கொடூரமான மரணத்தை ஏற்படுத்திவிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

