தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் 2-வது தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் வரும் 28 ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளதாகவும், இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருப்பதாகவும் பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இன்னும் சில வாரங்களில் தேர்தல் தேதியும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஆளும்கட்சியான திமுக, இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவதில் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. மறுபுறம் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் களத்தில் வேகத்தை கூட்டியுள்ளது. அதன்படி, அதிமுக தரப்பில் இருந்து 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளும் அறிவிக்கப்படுள்ளன.
இந்த நிலையில், சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் ஜனவரி 23-ந் தேதி நடைபெற்றது. இதில் பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
தொடர்ந்து இந்த கூட்டணியின் 2-வது தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் வரும் 28 ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருப்பதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் நிபந்தனைற்ற மன்னிப்பு கோரி உள்ளார். இதனை தங்களுக்கு கிடைத்த வெற்றியாக பாஜக உள்ளிட்ட அதன் துணை அமைப்புகள் கருதுகின்றன. இதனை அடுத்து பிப்ரவரி 28 ஆம் தேதி மதுரை வரும் பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ய உள்ளதாகவும் பாஜக தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றன. கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட இந்த விவகாரத்தை திமுக கடுமையாக விமர்சித்து செங்கல் பிரச்சாரம் செய்தது. அது இந்த தேர்தலிலும் எதிரொலிக்க கூடாது என்பதற்காக மதுரை தோப்பூரில் நடைபெற்று வரும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளின் நிறைவுற்ற ஒரு பகுதியை பிரதமர் மோடி திறந்து வைப்பார் எனவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், அவனியாபுரம் பெருங்குடி அருகே உள்ள மண்டேலா நகர், பாண்டிகோவில் அருகே உள்ள அம்மா திடல் ஆகிய இரண்டில் ஒரு இடத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், எந்த இடம் என்பது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று பார்வையிட்டு முடிவு செய்கிறார்.

