தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரை செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரூர் அரசு மருத்துவமனையில் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலுவுடன் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி, “குழந்தைகள் உள்பட 31 பேர் உயிரிழந்துள்ளனர். கரூர் அரசு மருத்துவமனை மற்றும் ஒரு தனியார் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கூடுதல் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.” என்று கூறினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (செப்டம்பர் 27) கரூர் வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார்.
இந்த கூட்டத்திற்கு ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். அப்போது கூட்ட நெரிசலில் தள்ளு முள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலர் மயக்கமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
பரப்புரை நடந்த இடத்தில் பொதுமக்கள் அணிந்து வந்த ஆயிரக்கணக்கான செருப்புகள், துண்டுகள், தண்ணீர் பாட்டில்கள் சிதறி கிடப்பதை காணொளிகளில் பார்க்க முடிகிறது.
இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன என கூறியுள்ளார்.
“கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மாண்புமிகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களையும் மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன்.” என்று கூறியுள்ளார்.
பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

