திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா? இருக்காதா? என்று இன்னும் சந்தேகம் உள்ளது. இரு தரப்பும் தொடர்ந்து விமர்சனம் செய்து கொண்டு இருக்கிறார்கள் என குஷ்பு கூறினார்.
விஜய் ஒரு கட்சியின் தலைவராக இருந்தாலும் அவரை நடிகர், டான்சராகவே மக்கள் பார்க்கின்றனர் என்று பாஜக மாநில துணைத் தலைவரும், நடிகையுமான குஷ்பு விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ”பட்ஜெட்டை திமுக முழுமையாக படிக்க வேண்டும். பட்ஜெட்டில் தமிழகத்திற்கு தேவையானவை மத்திய அரசு தந்துள்ளது.
மத்திய அரசு பட்ஜெட்டில் எதுவுமே தரவில்லை என சொல்லி மக்களை ஏமாற்றுகிறது திமுக. மக்கள் படித்தவர்கள். பட்ஜெட்டை படித்து பாருங்கள். இந்தியாவில் மற்ற மாநிலங்களை பார்க்கும் போது தமிழகத்திற்கு உள்கட்டமைப்பை மேம்படுத்த எவ்வளவு தந்துள்ளார்கள்? என்பது பட்ஜெட்டை படித்ததால் தெரியும்.
பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி நேரத்தை விரயம் செய்யாமல் முக்கிய விஷயங்களை பேச வேண்டும். ராகுல்காந்தி இதுவரை ஏதாவது முக்கியமான விஷயத்தை பேசி இருக்கின்றார் என்று காங்கிரஸ் உள்ளிட்ட யாராவது சொல்ல முடியுமா? பாராளுமன்ற நேரத்தை வீணாக்க தான் ராகுல் காந்தி பேசி கொண்டு இருக்கிறார்.
தமிழகத்தில் போதைப் பொருள் எளிதாக கிடைக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருள் மட்டுமின்றி மது வகைகளும் தாராளமாக கிடைக்கிறது.
கட்சி துணை தலைவர் என்ற முறையில் கட்சி என்ன வேலை தருகிறதோ அதை செய்வேன். தேசிய ஜனநாயக கூட்டணிக்காக வேலை செய்வேன். எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பது முக்கியம் கிடையாது. தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற பாடுவேன்.
மேடை நாகரீகம் என்று உள்ளது. நடிகராக ஆடினால் அது வேறு மாதிரி. விஜய் ஒரு கட்சியின் தலைவராக இருந்தாலும் நடிகர், டான்சராகவே மக்கள் பார்க்கின்றனர்.
விஜய் தனது நேர் எதிரி என திமுகவை தான் சொல்லி வருகிறார். அதிமுகவை சொல்லவில்லை. தேர்தல் நடந்தை விதிகள் இன்னும் வரவில்லை. தேர்தல் நடத்தை விதிகள் வந்த பின் எதுவும் செய்ய முடியாது. தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய கட்சி எது? முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று தான் பேசிக் கொண்டு வருகிறோம். அப்போது எடப்பாடி பழனிசாமி எந்த கட்சியை சார்ந்தவர்.
எந்தந்த தொகுதி, எத்தனை தொகுதி என்பது முடிவாகவில்லை. அதில் பெண்கள் எத்தனை என்று எப்படி சொல்ல முடியும்?
இதையும் படிங்க: கஞ்சா பயன்படுத்திய காவலர்கள்; மாவட்ட எஸ்.பி அதிரடி உத்தரவு
திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா? இருக்காதா? என்று இன்னும் சந்தேகம் உள்ளது. இரு தரப்பும் தொடர்ந்து விமர்சனம் செய்து கொண்டு இருக்கிறார்கள். எஸ்.வி. சேகர் விமர்சனத்திற்கு பதில் சொல்ல விரும்பவில்லை. பாடல் பாடியதால் விமர்சனம் செய்வது ஏற்க முடியாது” என குஷ்பு கூறினார்.

