தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழநியில் கடந்த 3 நாட்களில் 4 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். சுமார் ரூ.2 கோடிக்கு பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் கடந்த ஜன. 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூசத் திருவிழா தொடங்கியது.
இன்று (பிப்.4) காலை திருஊடல் நிகழ்ச்சியும், இரவு தெப்பத் தேரோட்டமும் நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
தைப்பூசத்தை முன்னிட்டு, விரதம் இருந்தும், மாலை அணிந்தும் பாதயாத்திரையாக வந்த லட்சக்கணக்கான பக்தர்களால் பழநி நகரமே விழாக்கோலம் பூண்டது. இதையொட்டி, கடந்த ஜன. 31 முதல் பிப். 2-ம் தேதி வரை 3 நாட்களுக்கு ரூ.20, ரூ.200 ஆகிய சிறப்பு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, கடந்த 31-ம் தேதி 1.70 லட்சம் பேர், 1-ம் தேதி தைப்பூசத்தன்று 1.60 லட்சம் பேர், 2-ம் தேதி 75,000 பேர் என 3 நாட்களில் மொத்தம் 4.05 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
தேவஸ்தானம் சார்பில் விற்பனை செய்யப்படும் அபிஷேக பஞ்சாமிர்தத்தை அதிக அளவில் பக்தர்கள் வாங்கிச் சென்றனர். கடந்த ஆண்டுகளைவிட, தைப்பூசத்துக்கு முந்தைய நாள் மட்டும் 3.12 லட்சம் பஞ்சாமிர்த டப்பாக்கள் ரூ.87.29 லட்சத்துக்கு விற்பனையாகின.
கடந்த 1-ம் தேதி தைப்பூசத்தன்று 1.27 லட்சம் பஞ்சாமிர்த டப்பாக்கள் ரூ.76.96 லட்சத்துக்கும், 2-ம் தேதி 78,907 பஞ்சாமிர்த டப்பாக்கள் ரூ.34.26 லட்சத்துக்கும் விற்பனையாகியுள்ளன.
இதன்மூலம் ரூ.1,98,52,180 வருவாய் கிடைத்துள்ளது. தைப்பூசம் முடிந்தும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் பழநி கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

