சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 90 நாட்களில் நிறைவடையும் என்று தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு கூறியுள்ளார்.
மழைநீர் வடிகால் பணிகள் முடிவு
சென்னை தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘சென்னையில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் கால்வாய் பணிகளில் ஒன்றிரண்டு தவிர மற்ற பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என்று தமிழக முதமைச்சர் நேரடியாக துறை சேர்ந்த செயலாளர், ஆணையர்கள் மற்றும் அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
முதமைச்சரின் அறிவுரையின்படி பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 90 நாட்களில் நிறைவடையும். குறித்த நேரத்தில் ஒப்பந்தப்பணிகளை முடிக்காத இரண்டு ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.2.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இருந்த ஒப்பந்ததாரர்கள்தான், சென்னையைப் பொருத்தவரை,ஒரே ஒப்பந்ததாரர் 10 இடங்களில் எடுத்துக் கொள்கின்றனர். அதனால்தான் பணிகளை முடிக்க முடியாமல் தடுமாறி வருகின்றோம். அதனையும் இந்தமுறை கண்டறியப்பட்டு கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம்’ என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு கூறியுள்ளார்.

