தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக வி.கே.சசிகலா விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அண்ணா நினைவிடத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழகத்துக்கு என பெரிதாக எதுவும் இடம்பெறவில்லை. பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதிகள் ஏற்கெனவே 2013-ம் ஆண்டு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது தான். இதை தற்போது நாடு முழுவதும் செய்யப்போவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேசமயம் மாத ஊதியம் பெறுவோருக்கான வருமான வரி விகிதாச்சாரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்பது பெரிய ஏமாற்றம்.
இன்றைக்கு நான் ஏற்ற உறுதிமொழியில், “எனது தலைமையில் துரோகிகளுக்கும், எதிரிகளுக்கும் நாங்கள் பாடம் கற்பிப்போம். என் தலைமையில் தேர்தலை சந்திக்க இருக்கிறோம்” என்ற வாசகங்கள் இடம்பெற்றிருப்பது உண்மை தான். இதில் யார் துரோகி… யார் எதிரி என்பதை மக்களின் கருத்துக்கே விட்டுவிடுகிறேன். மக்களுக்கு அது நன்றாகவே தெரியும். இதை விவரித்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல் தேர்தல் களத்தில் எங்களுடைய எம்ஜிஆர் – ஜெயலலிதா தொண்டர்கள் இருப்பார்கள். அது எப்படி, என்ன என்பதை விரைவில் அனைவரும் தெரிந்துகொள்வார்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இணைந்திருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் அவர்களுக்கு எது சரி எனப் படுகிறதோ, அந்தந்த கட்சியோடு கூட்டணி அமைக்கிறார்கள். அதில் நான் தலையிட்டு எதுவும் சொல்ல முடியாது. என்னைப் பொறுத்தவரை எம்ஜிஆர் – ஜெயலலிதா வழியில் ஆட்சி நடக்க வேண்டும்.

