கயத்தாறு அருகே கட்டிட தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய இரண்டு நபர்களை போலீசார் கைது செய்தனர்.
தொழிலாளி மீது தாக்குதல்
கோவில்பட்டி, கயத்தாறு அருகே உள்ள தெற்கு இலந்தைகுளம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி சுடலை(35). இவர் மணிகண்ட ஐயர் என்பவரது வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். இவர், அதே ஊரைச் சேர்ந்த கோபிகிருஷ்ணன்(23) மற்றும் மாரியப்பன் என்ற விக்னேஷ்(20) ஆகியோரை கட்டிட வேலைக்கு அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக சுடலைக்கும், அந்த 2 நபர்களுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் சுடலை கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு 2 நபரும் வந்துள்ளனர். திடீரென்று கட்டிட தொழிலாளி சுடலையை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இதனை பார்த்த 2 நபர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். படுகாயமடைந்த சுடலை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபிகிருஷ்ணன், விக்னேஷையும் கைது செய்து கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிபதியின் உத்தரவுப் பெயரில் இரண்டு நபர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

