தேனி மாவட்டத்தில் திமுக ஆலோசனை கூட்டத்தில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்ட திமுக
தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியில் திமுக சார்பில் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. தங்க தமிழ்ச்செல்வன் ஆதரவாளரான ராஜசேகர் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஒன்றிய செயலாளர் ரத்தினசபாபதிக்கு கூட்டம் நடத்துவது குறித்து தெரியப்படுத்தவில்லை. மேலும்,கூட்டத்துக்கான பேனரில் ரத்தினசபாபதி புகைப்படமும் இடம்பெறவில்லை.

இருதரப்பினரிடைய மோதல்
அப்போது ரத்தினசபாபதி கூட்டத்திற்கு வந்து, “தனக்கு கூட்டத்திற்கு அழைப்பு வழங்காதது” குறித்து கேட்டுள்ளார். அங்கு திமுகவை சேர்ந்த இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ரத்தினசபாபதியின் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்தனர். மேலும், அவர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கான பேனரை கிழித்து ரகளை செய்தனர். இதற்கு கூட்டத்தை ஏற்பாடு செய்த இராஜசேகரின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கைக்கலப்பு ஏற்பட்டது.

மண்டை உடைப்பு
இதனால் இரத்தினசபாபதியின் ஆதரவாளர்களும், ராஜசேகரின் ஆதரவாளர்களும் ஒருவருக்கொருவர் அடித்து கொண்டனர். அங்கிருந்த அனைத்து பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. உருட்டு கட்டையால் தாக்கியதில் 2 பேரின் மண்டை உடைந்தது. சம்பவம் குறித்து வீரப்பாண்டி காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ரத்தம் கொட்டிய நிலையில் இருந்த இரண்டு பேரையும் போலீசார் மீட்டு தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை
காயமடைந்த திமுக நிர்வாகிகள் இரண்டு பேருக்கும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தேனி வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திமுகவினர் இடையே ஏற்பட்ட இந்த கோஷ்டி மோதல், மண்டை உடைப்பு சம்பவம் தேனி திமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

